பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அடிகளார், திருக்குறளை அற நூலாக, நீதி நூலாக மட்டும் காண்பதோடு நின்றுவிடக் கூடாது, அதனை வாழ்வியல் நூலாகக் கொண்டு, வள்ளுவர் வழியில் நடந்தால் வையகம் தழைத்தோங்கும் என வலியுறுத்தி வந்தவர். "திருவள்ளுவர் நெறியில் இந்த வையகம் நடையோடுமானால் இன்று இந்த உலகத்தை வருத்தும் துன்பங்கள் அனைத்தும் அகலும்; அன்பு வளரும், அறம் வளரும்; பண்பாடு வளரும்; இந்த உலகம் இடையீடின்றி இயங்கும். இந்த உலகம் அழியாது; என்றும் நிலைபெற்று விளங்கும்" என வள்ளுவர் வழியில் நடையிடுவதுதான் உலகம் உய்ய வழி என உறுதிபடக் கூறுகிறார்.

"இன்னமும் திருக்குறளுக்கு உரையெழுதிக் கொண்டிருக்கின்றோம்; அல்லது விவாதங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்! ஆனால் திருக்குறள் நெறியை வாழ்வியல் நெறியாக்கச் சமூகம் முயலவில்லை" என வேதனைப்படுகிறார்.

"திருக்குறளை ஒரு சிறந்த இலக்கியம் என்றே பலர் கருதுகின்றனர். அஃது உண்மையேயானாலும் திருக்குறள் ஓர் இலக்கியம் மட்டுமன்று; திருக்குறள் பல்துறை தழுவிய ஒரு முழு நூல்:- அறிவியல் சார்ந்த நூல். திருக்குறளை இதுவரையில் யாரும் அறிவியல் முறையில் அணுகவில்லை" என அங்கலாய்க்கிறார்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - இது திருவள்ளுவர் காலத்தின் உயரிய கோட்பாடு. இக்கோட்பாடு உலகில் இடம் பெற்றால்தான் வெள்ளையர், கறுப்பர், தீண்டத்தகாதவள் என்று மனித குலத்தினை ஆட்டிப் படைக்கும் தீமைகள் மாயும். கடவுள் அருச்சனைகளால், ஆராதனைகளால், படையல்களால் திருப்தி செய்யத்தக்கவ ரல்லர் என்ற வள்ளுவத்தின் கொள்கை இடம் பெற்றால்தான் வாழ்க்கையோடியைந்த அறிவியல் சமயம் உலகில் வளரும். வாழ்வாங்கு வாழ்தலே சிறந்த வழிபாடு என்ற வள்ளுவத்தின் சமயநெறி வெற்றி பெற்றால்தான் சமுதாயத்தில் புரோகிதர்கள் உலவமாட்டார்கள்; சமய நிறுவனங்கள் தோன்றா; அவைகளுக்குள் ஆதிக்கப் போட்டிகளும் இரா. வள்ளுவத்தின் சமயம் வெற்றி பெறுமானால் தொண்டு நிறுவனங்கள் எங்கும் தோன்றும்; தொண்டர் குலம் தழைக்கும்; மனித குலமும் தழைக்கும்; எனவே வள்ளுவத்தின் சமயம் உலகப் பொதுச் சமயமாக மலரும் நாளே மனித குலத்திற்குப் பொற்காலம் படைக்கும் நன்னாளாகும் - அடிகளார் கூறியுள்ள இந் நன்னாள் மலர அவர் கூறியுள்ள கருத்துகள் நூல் முழுதும் விரவிக் கிடக்கின்றன.