பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போலும்! வேண்டுதல், வேண்டாமை என்ற வேற்றுமைகள் கடவுளுக்குக் கிடையாது. வேண்டுதல்', வேண்டாமை உள்ள இடத்தில் கடவுள் இருக்கவும் மாட்டார், வரவும் மாட்டார்! துன்பத்தின் பிறப்பிடமே, வேண்டுதல் வேண்டாமையேதான்.

கடவுளை நம்புகிறவர்கள், வழிபடுகிறவர்கள் உண்மையில் வழிபாடு செய்தால் வேண்டுதல், வேண்டாமை' என்ற வேறுபாடு அவர்களிடத்தில் இருக்காது; இருக்கக் கூடாது! அப்படியிருக்குமானால் கடவுளை வழிபடும் அவர்கள் வழிபடுவதாக நடிக்கிறார்கள் என்பதே பொருள்.

பத்திமையுடையோர் எங்கும் இறையருளைக் காண்பர்; எதிலும் இறையருளைக் காண்பர்; அவர்களுக்கு விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை, பகைவரும் இல்லை, நண்பரும் இல்லை. மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கித் தண்ணிர் ஓடிவருவதைப் போல, "பள்ளந்தாழ் உறுபுனலாகத்” திருவருளை நோக்கியே உணரத் தலைப்படுவார், செயலாற்றுவர். பத்திமை என்பது செயலற்ற நிலையன்று. செயல் நிறைந்த நிலை,.

ஆனாலும், பத்திமையின் பாற்பட்டெழுகுபவர்கள் செய்யும் செயலில் இலாப நோக்கு இல்லை. புகழ் நாட்டமில்லை. உயிர்கள் இன்புறுதலே நாட்டம். பத்திமையிற் பழுத்தவர்கள் வேற்றுமைகளை அகற்றுவர். ஒருமைப் பாட்டை வளர்ப்பர். அதுவே தூய அன்புநெறி, அருள்நெறி.

ஆதலால், வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாத கடவுளை வழிபட்டு, வேண்டுதல், வேண்டாமை என்ற தீய சுழற்சியிலிருந்து விடுபடுக! அப்போது துன்பம் தொலையும்; இன்பம் கிடைக்கும்! உலகம் செழிக்கும்!

           வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
           யாண்டும் இடும்பை இல.