பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆனால் பொன்னைப் பெற்றவரால் பொன்னுக்கு யாது பயன்?" என்று விவரிப்பர் சிவப்பிரகாச சுவாமிகள். ஆதலால் திருவள்ளுவர், "தவம் செய்வார் தம் கருமம் செய்வார்” என்று கூறுகின்றார். தவம் செய்வதால், உயிர் துன்பத்தினின்றும் நீங்குகிறது. இன்ப அன்பில் திளைத்து மகிழ்கிறது.

சிலபொழுது தவம் செய்வோர் ஆரவாரத்திற்காகச் செய்வர். புதரும் புற்றும் மூடி மறைக்கும் வரையில் ஊண் உறக்கமின்றித் தவம் செய்வர். ஆயினும், "நான் தவம் செய்கிறேன்" என்ற உணர்வோடு செய்வர். அவர்களுடைய தவம் பயனற்றது. “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா" என்பது போலப் பயனற்றுப் போய்விடும். சிலர் தவத்தில் சிறிது வளர்ந்தவுடன் சித்துகள் விளையாடுவர். அதனாலும் தவம் அழியும்; அவம் பெருகும். தவத்திற்கு 'நான்' என்ற அகப்பற்றும், 'எனது' என்ற புறப்பற்றும் அறவே நீங்கவேண்டும். இவையிரண்டும் அழியாதவரையில் தவத்தினால் பயனில்லை. தொண்ணுாற்று ஒன்பது கல் திறமையாக ஒடி நூறாவது கல்லில் விழுந்துவிட்டால் ஓடி வெற்றி பெற்றதாகக் கருதமுடியாது. புராணங்களில் வருகிற அசுரர்கள் அனைவருமே சிறந்த தவம் செய்தவர்கள். இராவணன், சூரபதுமன், இரணியன் முதலாயினோர் சிறந்த தவம் பயிற்றினும் 'நான்' என்னும் செருக்கினால் நட்டமடைந்தனர்; நடுக்குற்றனர்; தவத்தை இழந்தனர்; தண்டனைக்கு ஆளாயினர். ஆதலால் தவத்தில் பயன்,

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்

என்று திருக்குறள் பேசுகிறது. தன்னுயிரை-கண்டதை இச்சித்துத் துன்பத்திற்கு ஆளாக்காமல் தன்னுரிமையாக்கிக் கொண்டவரை ஏனைய உயிர்கள் தொழும். தொழுதற்குக் காரணம் சார்பினாலே தானும் நலம் பெறலாம் என்பதேயாகும். தானே ஆற்றினில் நீந்த முடியாதவர் படகின்