பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

233



துணைகொண்டு நீந்திக் கரை சேர்தலைப் போலத் தவத்திற் சிறந்தாரைப் புணையாகக் கொண்டு மற்றவரும் கரையேறலாம். அப்பரடிகளைப் புணையாகக் கொண்டு அப்பூதியடிகள் உய்தி பெற்றமை உணரத்தக்கது. மேலும் தன்னுயிர் தானறப் பெற்றவர் என்பதற்கு 'நான் என்ற சுட்டுணர்வு அழிதல்' என்று பொருள் கொள்ளுதலும் சிறப்பாகும். நான் என்ற சுட்டுணர்வு அழிந்தவர்கள் உலகத்தை வாழ்விக்கும் உத்தமர்கள். அவர்களால் உலக உயிர்கள் இன்பநலம் பெறும். ஒரு படகின் வழி, பலர் கரையேறுதலைப்போல, ஒரு தவஞானத் தலைவரின் மூலம் கோடானு கோடி உயிர்கள் உய்தி பெறுகின்றன.

மனிதன் தன்னுடைய அகப்பற்று, புறப்பற்றுகளை ஒவ்வொன்றாக விட்டொழிக்க வேண்டும். அவற்றை விட்டொழிப்பது என்றால், முற்றிலும் விட்டு விலகுவதல்ல. தவத்தின் தொடக்கத்தில் இது இயலக்கூடியதுமன்று. ஆதலால் பொருள்களை வேணவா உணர்வுடனும், விகற்ப உணர்வுடனும் நோக்காதிருத்தல்; தேடாதிருத்தல் ஆகிய பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பின்பு, தான் துய்க்கும் இன்பத்தை மற்றவர்களும் துய்க்கவேண்டும் என்று கருதவேண்டும். மற்றவர்கள் துய்த்து மகிழ்வதைப் பார்த்து மகிழப் பழகிக்கொள்ள வேண்டும். அதன் பின்பு பிறர் மகிழ்வுக்காகத் தன்னுடைய மகிழ்வை விட்டுக்கொடுக்கப் பழகுதல் வேண்டும். இத்தகு பழக்கம் வளரவும், உறுதி பெறவும் அடிப்படையான நம்பிக்கை ஒன்று தேவை. அதாவது எல்லாம் வல்ல இறைவன் எல்லா உயிர்களிடத்தும் தங்கியிருக்கிறான். அந்த உயிர்கள் மகிழும் பொழுது இறைவனும் மகிழ்கின்றான். அந்த உயிர்கள் அழும்பொழுது இறைவனும் அழுகின்றான் என்ற அறிவும் உணர்வும் தேவை. இத்தத்துவத்தினை விளக்க அன்றோ தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டில், தமிழ் வையை நதிக்கரையில் எம்பெருமான் முதுகில் விழுந்த அடி எல்லார் முதுகிலும்