பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பது மணிமொழி. அவாவே எல்லாத் துன்பங்களுக்கும், அத்துன்பங்களை நொந்து அனுபவிக்கும் பிறப்புகளுக்கும் காரணமாகும். இதனை,

அவாவென்ய எல்லா வுயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பினும் வித்து

என்ற குறளால் அறிக.

திருவள்ளுவர்,

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

என்று கூறுவது எண்ணத்தக்கது. ஏன்? செல்வத்தின் பயன் இன்பம். ஆனால் செல்வம் ஈட்டும் பொழுதும் ஈட்டிய செல்வத்தைப் பாதுகாக்கும் பொழுதும், கொடுக்கும் பொழுதும் துன்பமே தருகிறது. அதனால், "வேண்டாமை யன்ன விழுச் செல்வம் ஈண்டில்லை" என்று கூறுகிறார். பேரின்பப் பேற்றுக்குத் தூய்மையே அடிப்படை அவாவின்மையின் விளைவே தூய்மை, அவா வெளிப்படையாக மட்டும் வேலை செய்யாது. வஞ்சனையாகவும் வேலை செய்யும். ஒன்றைக்காட்டிப் பிறிதொன்றைத் தருவதே வஞ்சனையாகும். வெண்ணெய் என்று கூறிச் சுண்ணாம்பைத் தருவதுபோல, அவாவும் போலிக் கவர்ச்சிகளால் மயக்கித் துன்பம் விளைவிக்கும் என்பதை,

"அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா"

என்ற குறளால் அறியமுடிகிறது. துன்பமே கொடுமையானது. துன்பத்துள் துன்பம் எதுவாக இருக்க முடியும் நிச்சயம் ஒரு துன்பமாக இருக்க முடியாது. காரணம், துன்பம் தோன்றும், ஆனாலும் மாறுபடும். ஆனால் அவாவோ மாறாத் துன்பத்தைக் கொடுக்கும். இதனை,