பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

265


இழந்தவர்கள். ஊழினை மாற்றி அமைத்துக்கொள்ளத் தன் முயற்சி மேற்கொள்ளாது தவத்தினை நாடித் துறவியாவர். அப்பொழுது ஊழ் வந்து ஊட்டாமலே கழியும். இம்முயற்சி ஒரோவழி நன்மையானாலும் ஆகலாம். ஆனாலும், ஊழினை மாற்றிக் கொள்ளும் முயற்சியே சிறப்புடையது.

மக்களில் பலர் இன்பம் என்றால் மகிழ்கின்றனர்; துன்பம் என்றால், நடுங்குகின்றனர்; புகழ் என்றால் விரும்பி ஏற்கின்றனர்; இகழ்ச்சியென்றால் மறுக்கின்றனர். இஃது ஏன்? ஊழ் முற்றுப்புள்ளி பெறாது சங்கிலித் தொடர்போல் தொடர்வதற்குக் காரணம், இன்பங் கண்டபொழுது மகிழ்தலும், துன்பங் கண்டபொழுது துவளுதலும் ஆகிய செயல்களினாலேயாம். நோய்க்கு உண்ணும் மருந்து சுவையால் இனிப்பாக இருந்தாலும் மருந்தேயாம். சுவை கருதி மருந்தை அதிகமாக உண்ணமாட்டார்கள். மருந்து கசந்தாலும் நோய் நீக்கம் கருதி உண்ணாமலிருக்க மாட்டார்கள். அதுபோல இன்ப துன்பங்களைத் தன்னுடைய செயல்களின் விளைவாகிய ஊழின் பயனே என்று கருதி, நொந்து நோகாமல், மகிழ்ந்து நெகிழாமல் மீண்டும் ஊழுக்கு உயிர் கொடுக்காமல் இரண்டையும் ஒப்பக் கருதி அனுபவிப்பதே ஊழினைக் கடக்கக்கூடிய ஒப்பற்ற வழி.

இதனையே திருவள்ளுவர்,
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்

என்று கூறுகிறார்.

முடிவாகத் திருவள்ளுவர், "ஊழிற் பெருவலியாவுள?" என்றே கேட்கின்றார். ஊழினால் தமக்கு வந்துள்ள கேட்டினை மாற்றிக்கொள்ளப் பலருடனும் கூடிக் கலந்து பேசி, பல்லாற்றான் முயற்சி செய்தாலும் ஊழின் பயனை அனுபவிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியாது. இதனை,