பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

345


நல்ல கனிந்த மாம்பழத்தை மெதுவாகத தொட்டாலே சாறு கிடைக்கும். ஆனால் கரும்பையோ, உருவம் தெரியாமல் நசுக்கியே சாறெடுக்க வேண்டும். கீழ்மக்களிடத்தில் உதவி பெறுவதாயினும் சரி, அல்லது வேலை வாங்குவதாயினும் சரி நையப்புடைத்தாலே செய்வர். இவர்களை நோக்கிப் பிறந்த பழமொழிகளே "அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டான்"; "அடியாத மாடு படியாது” என்பனவாகும்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்

என்பது குறள்.

கயமைத்தனமுடையவர்களுக்கு அழுக்காறு நிறைய உண்டு. நிறைய உண்டு என்பதைவிட அழுக்காற்றினாலேயே உருவமும் உணர்வும் படைத்தவர்கள் என்று கூறுவது பொருந்தும். இவர்களுடைய அழுக்காறு மிகவும் மோசமானது. பிறர் உண்டு உடுத்து வாழ்வதைக் கண்டாலே இவர் களுக்குப் பிடிக்காது. இவர்கள் பிறர் உண்டு உடுத்து மகிழ்வதைப் பார்த்துக் குறை சொல்லுவர். கீழ்மக்கள் குறை சொல்ல, குற்றங்கள் இருக்க வேண்மென்று அவசியமில்லை. குற்றங்கள் இல்லையானலும் இவர்கள் துருவிக் கண்டுபிடித்து விடுவார்கள். இல்லையெனில் கற்பித்துவிடுவார்கள். "ஆ, பூ அவர்தானே! நமக்குத் தெரியாதாக்கும். அவர் அதிலே கொள்ளையடித்துத்தானே வைத்திருக்கிறார்” என்று சுலபமாகச் சொல்லி விடுவார்கள். இதனை,

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்

என்று குறள் கூறுகிறது.

'உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின்' என்பது பார்த்த அளவானே அழுக்காறடைவர்; அலர் தூற்றுவர் என்ற