பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

347


மேலும் கயவர் தோற்றத்தால் ஆண்மையுடையராயிருப்பர். அரிச்சந்திரனைப் போல் நடிப்பர்; வையத்தை வாயால் அளப்பர்; 'உயிரெல்லாம் உறவுடையோர் பாசத்திற்கே' என்றே பசப்புவர். ஆனால், அவர்களுக்கு யாதாவதொரு துன்பம் வந்துற்றால் விரைந்து ஒடுவர்! எங்கு? தம்மையே விலை பேச ஐயோ, பாவம்! தம்மையும் விலை பேசுவர்; தம்மை நம்பிப் பழகிய நண்பர்களின் மானத்தையும் விலை பேசுவர்; பழகினோர் உயிரைக்கூட விலை பேசிவிடுவர். நிலமகள் இத்தகு கயவர்களைத் தாங்கிக் கிடப்பது பொறையுடைமை நோக்கிப் போலும், மறந்தும் கயமைத்தனத்திற்கு ஆளாகக் கூடாது. கயவர்களையோ மறந்தும் நிழலுக்குக்கூட உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. இது வாழ்வாங்கு வாழ்ந்து வெற்றிபெற வள்ளுவம் கட்டித் தந்த அரண்.

ஒப்புரவு நெறி

வாழ்க்கை குறிக்கோள் உடையது. அக்குறிக்கோள் எது? தாம் வாழ்வதா? தாம் வாழ்தல் என்பது தவிர்க்க இயலாதது. ஆயினும் தாம் வாழ்தல் என்பது சாதனம். ஆதலால், தாம் வாழ்தல் என்பது எளிய ஒன்று. இயற்கையேகூட வாழ்வித்து விடும். நல்ல சமூக அமைப்பும் அரசும் தோன்றி விட்டால் தாம் வாழ்தல் என்பது எளிது. இன்று சமூக அமைப்பு நன்றாக இல்லை. அரசுகள் நன்றாக இல்லை. ஆதலால், தாம் வாழ்தலுக்குக் கூட இன்று உடனடியாக நல்லதோர் சமூக அமைப்புக் காண்பதைக் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். நன்மை நல்கும் அரசு கண்டாக வேண்டும்.