பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாதுகாத்தல் என்றால் செல்வத்தின் பயனாகிய இன்பம் நுகர்தல், ஈத்துவந்து மகிழ்தல் ஆகியன செய்யாமல் பூட்டிவைத்துப் பாதுகாப்பது என்பதும் பொருளன்று. பொதுவாகவே, போற்றுதல் என்ற சொல்லிலேயே வளர்த்தல், பாதுகாத்தல் என்ற இரு கருத்துகளும் அடங்கும்.

"பொருட் செல்வம் போற்றுவார் கண்ணே உள” என்கிறார் திருவள்ளுவர். பொருட் செல்வம் போற்றுதற்கு வேண்டிய முதற்குணம், பொருளின் மதிப்பினை-சிறப்பினை உள்ளவாறு உணர்தல். பொருள் என்றால், அது வளரும் இயல்புடையதேயன்றி, குறையும் இயல்புடையதன்று. பொருட் செல்வத்தை வாழ்க்கை என்ற களத்தில், உழைப்பு என்ற நீரூற்றிச், சிக்கனம் என்ற வேலி கட்டிப் பாதுகாத்தல் வேண்டும். பொருளின் தாய் உழைப்பேயாகும். உழைப்பின்றேல் பொருள் இல்லை. வந்த பொருளைச் சிக்கன முறையில் பாதுகாக்க வேண்டும்.

அதனாலன்றோ அப்பரடிகள், "ஏரி நிறைந்தனைய செல்வம் கண்டாய்” என்றார். ஏரிக்குக் கரைகட்டித் தண்ணீரைக் காப்பது போல், பொருளுக்குச் சிக்கனம் என்ற கரை தேவை. சிக்கணம் என்றால் கஞ்சத்தனம் என்று பொரு ளல்ல-அப்படிப் பொருள் கொள்ளக் கூடாது. ஒரு ரூபாய் செலவில் முடிக்கக்கூடிய காரியத்திற்கு இரண்டு ரூபாய் செலவு செய்வது பொருள் இழப்பிற்குரிய வழியாகும். அத்தகையோரிடத்தில் செல்வம் தங்குவதில்லை. மேலும், பொருள் வருவதற்குரியனவாகக் கிடைத்துள்ள வாய்ப்புகளை இழக்காமல் முறையாகப் பயன்படுத்திப் பொருளிட்ட வேண்டும்.

வாய்ப்புகளை இழப்பதும்கூடப் பொருள் இழப்பே யாகும். அதுபோலவே ஒரு களம்-அதற்குப் பயன்படுத்தக் கூடிய உழைப்பு ஆகியவை மூலம் எவ்வளவு பொருள் ஈட்டவேண்டுமோ, அவ்வளவையும் ஈட்ட வேண்டும்.