பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நலம்



101


போல எந்தச் சூழ்நிலையிலும் ஒரேமாதிரி இதயத் துடிப்பு உடையவராக விளங்கவேண்டும் என்று கூறுகிறார்.

ஆதலால், நற்பண்புகளுக்கு எதிரிடையான கோபம் வேண்டாம்! வேண்டாம்! கோழைகளின் இயல்பே கோபம்! ஆண்மையும் தைரியமும் உடையவர்கள் கோபப்பட மாட்டார்கள்! கோபத்துடன் தொடர்பு கொண்டு இழப்பை அடைவதில் என்ன பயன்?

47. இன்னா செய்யாமை

திருக்குறள் ஓர் அறிவியல் நூல்; உளவியலைச் சார்ந்த அறிவியல் நூல். நெருப்பை அள்ளி அடுத்தவர் வீட்டின் மீது கொட்டினால் கை சுடாமலா போகும்? அது போல் நாம் மற்றவர்களுக்குக் கொடுமை செய்தால் நாம் கெடாமலேயா மற்றவர்களுக்குக் கொடுமை செய்ய முடியும்? அல்லது இயலும்?

நமது சிந்தனையும் அறிவும் உணர்வும் புலன்களும் கெட்ட பிறகுதான் மற்றவர்களுக்குக் கேடு செய்ய முடியும் ஆதலால், யார் ஒருவருக்கும் தீங்கு செய்தல் கூடாது; நமக்குத் தீங்கு செய்தாருக்குங்கூட நாம் திரும்பச் செய்யகூடாது. இப்படித் தீமைக்குத் தீமை என்னும் சித்தாந்தம் தீமையின் தொடர் வரலாறாகி விடும்; தலைமுறைத் தலைமுறைக்குத் தீமை தொடரும், இது விரும்பத் தக்கதன்று.

எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்தாற்றும் பண்பே விரும்பத்தக்கது. அது மட்டும் அல்ல, பொறுத்துப் போதல் எளிமையானது. பொறுத்துப் போதல் ஆக்கத்திற்குத் துணை செய்யும். அதற்கு மாறாகச் செய்யும் பழிவாங்கும் முயற்சி கடினமானது; அதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டிவரும்; இன்பமும் அமைதியும் குலையும்.

பழிவாங்கும் மனப்போக்கில் பழி பாவங்களுக்குரிய அச்சம் இருக்காது. ஏன் அறிவேகட வேலை செய்யாது.