பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



151



இனி, அரசியலைப் பற்றி திருவள்ளுவர் என்ன கருதினார்-வள்ளுவரின் அரசியல் சித்தாந்தங்கள் என்ன என்பதையும் நாம் சிறிது காணலாம்.

திருவள்ளுவருக்கு முன்பிருந்த அரசியல் யுகத்தில் அவருக்கு அவ்வளவு பிடிப்பில்லை. அவர் ஒரு புதிய அரசியல் சித்தாந்தத்தை நாட்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நமது இலக்கியங்களைப் பார்த்தால், ‘மன்னன் உயிர்த்தே மலர் தலையுலகம்' என்ற கொள்கைதான் நிலவியது. கோடானுகோடி மக்கள் வாழ்ந்து வளரும் உலகம் இது, ஆனால், அதற்கு ஒரேயொரு உயிர்-ஒரேயொரு ஆன்மா, அரசன்தான்! நாம் உடுப்பதுவும், உண்பதுவும், பூசுவதும் உடம்புக்காகவா? உடம்பிலிருந்து உயிர் பிரிந்தபிறகு இந்த உடம்பிற்குப் பூசுவதும், மற்றவையும் ஏதோ உபசாரத்திற்காகவேயன்றி வேறெதற்கு? அப்படியானால், உயிர் பெரிதா? உடல் பெரிதா? உயிர்தானே? அந்த உயிர் பிரிந்தபிறகு பூசுவதும் பிறவும் செய்கிறோம் என்றால் கடைசிக்காலத்தில் ஏதோ உபசாரத்திற்காகச் செய்கிறோம். அவ்வளவுதான்! திருவள்ளுவருக்கு முந்திய யுகம், 'மக்களெல்லாம் உடம்பு-மன்னன் உயிர்’ என்று சொன்னது. மன்னன் என்ற உயிர், நலன் பெறத்தான் மக்கள் வாழுகிறார்கள் என்ற அரசியல் தத்துவம் நிலவியது! மன்னனைப் பார்த்தால் மகேஸ்வரனைப் பார்த்தது போலக் கருதினார்கள். இந்த நிலையைத் திருவள்ளுவர் பார்த்தார்.

அரசனின் ஆதிக்கத்தைத் தடுத்துக் கேட்கக் கூடாது என்று ஐரோப்பிய நாட்டிலே ஒரு சித்தாந்தம் வளர்ந்து வந்திருக்கிறது-ஆம். அரசன் தவறு செய்யமாட்டான் என்ற ஒரு நம்பிக்கை. எனவே, ‘அரசனின் உரிமை தெய்வீக உரிமை. அதை யாரும் தட்டிக் கேட்கக் கூடாது' என்பன போன்ற கருத்துக்கள் பரவியிருந்த உலகில், ‘அரசன் குடி தழீஇக் கோலோச்ச வேண்டும்’ என்று வலியுறுத்திக் கூறியவர்