பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூறினார். இப்படியிருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறினார். அதுவே சீர்திருத்தம்தான். மேலும் நூல் முறையிலேயே வள்ளுவர்தான் சீர்திருத்தம் செய்தார். திருக்குறளுக்கு முன்பு, ஒழுக்க இயலுக்காக முறையான ஒழுக்க நூல்-நீதி நூல் எதுவும் எழுந்ததில்லை. எனவே, ஒழுக்கம் இயல் கூற முதன் முதல் திருக்குறள் எழுந்ததே சீர்திருத்தம்தான். திருவள்ளுவர் நேரடியாக வந்து உன் வாழ்க்கை வளமுற இன்ன இன்ன கொள்கையைக் கடைப்பிடி என்று கூறுகிறார். அவர் மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் குறட்பாக்களை ஆக்கியிருக்கிறார்.

கள்ளுண்ணல், புலால் உண்ணல் ஆகிய தமிழ் மரபை வள்ளுவர் கடுமையாகச் சாடுகிறார்.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று"

என்கிறார் திருவள்ளுவர். இதிலே, “அவிசொரிந்து ஆயிரம் வேட்டல்" என்பது மரபு. அதாவது வேள்வி செய்தல் மரபு, ஆனால், "ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை" என்பது சீர்திருத்தம்.

வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டிவைத்துக் கற்பைக் காப்பதுதான் இங்கு மரபாக இருந்திருக்கிறது. இதனையே "இற்செறித்தல்" என்று குறித்துள்ளனர், பழம்புலவர்கள். திருவள்ளுவரோ, இந்தச் செயல்முறையை வன்மையாக எதிர்க்கிறார். "சிறைகாக்கும் காப்பு எவன் செயும்?" என்று கேட்கிறார். "நிறை காக்கும் காப்பே தலை" என்று வலியுறுத்துவதன் மூலம் சீர்திருத்தம் செய்கிறார்.

அடுத்து, வாய்மை என்பதற்கு நாட்டில் இருந்த வழக்கு "உள்ளதை உள்ளவாறே சொல்லுதல்" என்பதுதான். வள்ளுவர் இந்த மரபை வலியுறுத்தவில்லை. உள்ளதை உள்ளவாறே சொல்லித் தீமை விளைவிப்பதைவிட, பிறருக்குத் தீமை விளைவிக்காத-நன்மை விளைவிக்கின்ற பொய்யையும்