பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசியல்



197


உணர்த்துவது உணரத்தக்கது. தீ ஏதாவது ஒரு பொருளை பற்றுக்கோடாகக் கொண்டே இயங்குகிறது. அதுபோல உயிர் யாதானும் ஓர் உடம்பினைப் பற்றுக் கோடாகக் கொண்டே இயங்கும். உடலினுக்கு எரிபொருள்களாக உணவு முதலிய பண்டங்கள் தேவை. அஃதின்றேல் உடலியக்கம் ஒடுங்கும். இதனைப் "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” என்று தெளிவாகத் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது. இப்பொருள்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுவதாலும், கால வெள்ளத்தில் அழியாமல் பொருள்களின் மதிப்பைத் தாங்கித் திரும்ப அப்பொருள்களைப் பெறுதற்குக் கருவியாக இருப்பதாலும் உபசார வழக்கில் பொன்னையும் பொருளெனப் போற்றினார்கள்.

இத்தகு வாழ்க்கைக்குப் பயன்படும் பொருளியலைப் பற்றித் திருக்குறள் தெளிவான கருத்தை மேற்கொண்டிருக்கிறது. இன்றைய பொருளியல் சாத்திரங்கள் பக்கம் பக்கமாக விரித்துரைக்கும் பொருளியல் சித்தாந்தங்களைத் திருக்குறள் மிக எளிமையாக நான்கைந்து சீர்களில் விளக்குவதில் வெற்றிபெற்று நிற்கிறது.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

இந்த ஒரு திருக்குறள் பொருளியல் தத்துவத்தின் சிறந்த விளக்கமாக அமைந்திருக்கிறது. உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. மனித எண்ணிக்கையால் மட்டுமன்று. தேவைகளின் பட்டியல்களும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. வளரும் தேவைகளை ஒரு வழித்துறையில் முற்றிலும் அடைய முடியாது. ஆதலால் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காகப் புதிய புதிய பொருள் நுட்பத்திற்குரிய புதிய வழிகளைக் காணவேண்டும். இதனை "இயற்றலும்" என்ற சொல் மூலம் காட்டுகிறார் திருவள்ளுவர். அதாவது திட்டமிட்டுத் தொழில் புரட்சிகளைச் செய்து புதிய வருவாய்த்