பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது



237


வாழச் சிந்தனையாலும், செயலாலும் கடமைகளைச் செய்தல் வேண்டும். இஃதன்றி உலகியலை ஒழித்த தவம் என்று பெயர் கொள்ளுதல் சிறப்புடையதன்று.

‘கடமைகளை முறையாகச் செய்தல் சிறந்த கடவுள் வழிபாட்டுக்கு ஈடு அல்லது இணையானது’ என்னும் பொருள்படச் சான்றோர் பலரும் பேசியிருக்கிறார்கள்.

"கடமையே மிகச்சிறந்த நோக்கம். ஏனெனில் அது கடவுட் கருத்தைத் தழுவியதாக இருக்கிறது" என்று லக்கார்டயரும்;

"கடமையை விருப்பத்தோடு செய்பவர்களுக்குக் கடவுள் எப்பொழுதும் உதவியாக இருக்கிறார்” என்று கெய்லரும்;

"கடமைகளைச் செய்யாமல் தட்டிக் கழித்தல் அறிவையும், மனத்தையும் பலவீனப் படுத்தித் தூய்மை தவவாழ்க்கையைப் புதைத்து விடுகிறது” என்று ட்ரயான் எட்வார்ட்ஸ் என்பாரும்;

"உயிர்கள் தம்முடையக் கடமைகளை உடனடியாகச் செய்வதாக முடிவெடுத்துக் கொள்வது கடவுள் இதயத்தின் சந்நிதி" என்று பேகனும் பேசியிருக்கிறார்கள்;

பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டச் சான்றோர்களின் வரலாற்றை நமக்கு அருளிய சேக்கிழார் பெருமானும், தவம் என்ற வாழ்க்கையை உலகியல் வாழ்க்கையோடு இணைத்துக் கூறுவதை நூல் முழுதும் பார்க்கக் காணலாம். சங்கிலியாருக்குச் சுந்தரரைச் சிவபெருமான் அறிமுகப் படுத்தும்போது, ‘மேருவரையின் மேம்பட்ட தவத்தினான்’ என்று கூறுவதாகச் சேக்கிழார் பெருமான் சித்திரித்திருப்பது அறிந்தின்புறத்தக்கது. அதனால், திருக்குறள் காட்டும் தவம் தத்தம் கடமைகளைச் செய்தல்; கடமைகளைச் செய்யா தொழித்துப் பிறவற்றைச் செய்தல் அவமாகும்.