பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



269


விடவில்லை. நாம் செய்த பிழையே காரணம். இனிமேலும் தொடர்ந்து பிழை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

இன்று, நம் மத்தியில் மொழிச் சிக்கல் பரவலாகப் பேசப்படுகிறது; இந்தி எதிர்ப்புணர்ச்சி காட்டப்படுகிறது. இவை சரியா? தவறா? என்று திருவள்ளுவர் பார்வையிலும் இன்றைய சூழ்நிலையை அனுசரித்தும் பார்ப்பது நமது கடமை அல்லவா?

இனிய தமிழ்ச் செல்வ! தமிழின் வளர்ச்சி வேறு! தமிழ் வளர்ந்தால் தமிழனும் வளர்வான்! தமிழன் வளர்ந்தால் தமிழும் வளரும்! ஆனால் இவையிரண்டும் உடன் நிகழ்வாக நிகழ வேண்டும். சில சமயங்களில் தமிழுக்குத் தொடர்பில்லாமல் தமிழன் வளர்வான். இது வரவேற்கத்தக்கதல்ல! இனிய தமிழ்ச் செல்வ! இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கு முன்பு சில அடிப்படை உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முதலாவது இன்று தமிழர்கள் உலகம் முழுதும் பரவி வாழ்கிறார்கள். உலக ஆட்சி பெறவில்லையே தவிர, உலகக் குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். செல்வ! உண்மை என்னவென்றால் நமது தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையை விட இந்தியாவின் பிறமாநிலங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழ் நாட்டில் வாழும் நமது எழுத்தும் பேச்சும் எடுக்கும் முடிவுகளும் உலகந்தழீஇ வாழும் தமிழ் மக்களுக்கு ஊறு விளைவித்து விடக் கூடாது. செல்வ, இரண்டாவதாக இன்றைய உலகம் சுருங்கி வருகிறது. உலக மானுடம் ஒன்றாகும் காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இந்தக் காலக் கட்டத்தில் நாம் தமிழனாகவும் இந்தியனாகவும் உலகக் குடிமகனாகவும் வாழ வேண்டியது வரலாற்றின் கட்டாயமாகும். அதுமட்டுமல்ல. அதுதான் அறிவு என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். இதைத்தான் திருவள்ளுவர் "உலகந் தழீஇயது ஒட்பம்” என்று கூறுகின்றார். சிறந்த மொழிப் பற்றுடைய இனத்தவர் உலகின் எத்தனை மொழிகளைக் கற்றாலும் தாய்மொழிப் பற்றில்