பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



273



இனிய செல்வ, இந்திய தேசிய மொழிகள் தமிழ் உள்பட இந்திய ஆட்சி மொழியின் தகுதி பெற்றால் இந்தியை நாட்டின் பொது மொழியாக உறவு மொழியாக ஏற்றுக் கொள்ளலாம். இதனால் இந்திய ஒருமைப்பாடு உறுதி பெறும். தமிழ், நடுவணரசின் ஆட்சிமொழியாதல் பற்றி மட்டும் எடுத்துக் கூறினால் பாராளுமன்றம் ஏற்குமா என்பது ஐயம்! ஆதலால், ‘இந்திய தேசிய மொழிகள் நடுவணரசின் ஆட்சி மொழித் தகுதியை அரசியல் சட்ட அடிப்படையில் பெறவேண்டும். இந்தி, நாட்டுப் பொதுமொழியாக பொது உறவு மொழியாக இடம் பெறவேண்டும்’ என்ற தீர்மானம் சரியானது. அதனால் தமிழ் பயிற்றுமொழி, இந்தி நாட்டு மொழி என்ற இரு மொழித் திட்டத்தை நடைமுறைப் படுத்தலாம். இந்த இரண்டு மொழித் திட்ட அடிப்படையில் இந்தி பேசும் மாநிலங்கள் தென் இந்திய மொழி ஒன்றைக் கட்டாயமாகப் படிக்கவேண்டும். ஆனாலும் இந்த இரண்டு மொழிகளுடன் நிற்பது போதாது. விருப்பமொழிப் பாடமாக மூன்றாவது மொழியாக ஆங்கிலம் கற்க வேண்டும். மேலும் கற்கும் திறன் உள்ளவர்கள் படிக்க, பேசத்தக்க வகையில் இந்திய மொழிகளில் எந்த ஒன்றையாவது படிக்கலாம் அல்லது ஆய்வு அடிப்படையில் ருசிய மொழி, சப்பானிய மொழி போன்றவற்றைப் படிக்கலாம்.

இப்படி எண்ணித் திட்டமிட்டுப் பேசினால், எழுதினால், இக்கருத்துக்கு இயக்கருவும் கொடுத்தால் வெற்றி பெறலாம்.

இனிய தமிழ்ச் செல்வ, இந்தியா ஒரு பெரிய நாடு. இந்திய நிர்வாக இயந்திரம் மிகமிகப் பெரியது. இவ்வளவு பெரிய நிர்வாகத்தில் 14 மொழிகள் என்பது ஓரளவு சிக்கல் தான்! ஆயினும் இந்திய ஒருமைப்பாடு மிகப் பெரிய இலக்கு. ஆதலால் இந்தச் சிக்கலை-கூடுதல் செலவை-இழப்பை ஏற்பதைத் தவிர வழியில்லை. இதில் ஒரளவு எளிமைப்படுத்த நடுவணரசின் மாநில மைய அலுவலகம் ஒன்றினை அமைத்து மாநில அளவிற்கு மட்டுமே தொடர்புடைய

தி.19.