பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



285


இயற்கை நியதிகளுக்கு மாறானது எல்லாம் நோய்தானே! தீமைதானே!

"இகலென்ப வெல்லாவுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை
பாரிக்கும் நோய்”

என்பது குறள்,

இனிய செல்வ! மாறுபடுவதால் பிரிவினை உணர்வு பெறுவதால் வெற்றி கிடைக்கிறது! புகழ் கிடைக்கிறது! பொருள் குவிகிறது! என்றெல்லாம் சிலர் கருதுகின்றனர். இது ஒரோவழி உண்மையும் கூட. ஆனாலும் இவை நிலையானவையல்ல. பிரிவினைகளால் போர்களால் பெற்ற வாழ்வு விரைவில் நிலை தாழும்! முடிந்தும் போகும்! அலெக்சாந்தரின் வெற்றிகளும் நெப்போலியனின் வெற்றிகளும் என்னாயின! அந்த வெற்றி வீரர்களின் வாழ்க்கை எப்படி முடிந்தது? துன்பமாக அல்லவா முடிந்தது? ஏன், அசோக சக்கரவர்த்தியின் போர்க்கால வாழ்க்கையை வரலாறு பாராட்டவில்லை? போரின் முடிவில் அவர் மனம் ஏற்றுக்கொண்ட சமாதான வாழ்க்கையை உலக வரலாறு போற்றுகிறது. அசோகர் அரசின் நியதிகளுக்கு அடங்காத வரைக் கூட, அன்பு நெறியிலேயே திருத்த முயன்றார். சமாதானத்தையும் பொறுத்தாற்றும் பண்பையும் (சகிப்புத்தன்மை) கருவிகளாகக்கொண்ட "சீலத்தினால் வெற்றி" என்ற நெறி வழியே கிரேக்கரையும் சிங்கள நாட்டினரையும் தாம் கவர்ந்து வெற்றி கொண்டதாக அசோகர் குறிப்பிட்டுள்ளார். இனிய செல்வ! இன்று அசோகர் வழி வந்த பாரத நாட்டு மக்கள், இலங்கைக்குச் சமாதானத்தைப் பரிசாக வழங்கியுள்ளனர். அந்தப் பரிசே இந்திய இலங்கை ஒப்பந்தம். "துன்பத்துள் துன்பம் இகல்" என்பது திருக்குறள். மாறுபாடுகளும் பிரிவினையும் துன்பமே! இலங்கை, இலங்கையருக்கே! இலங்கையில் வாழும் தமிழர்களும் பேசும் மொழியால் தமிழர்கள்; நாட்டால் இலங்கையர்களேயாம். இந்த உண்மையினைச் சிங்களவர்களும் மறத்தல் கூடாது தமிழர்களும்