பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குரியனவல்லாதனவற்றைத் தொடர்ந்து விவாதித்துச் செழுமைப்படுத்தி ஏற்றல் முதலியன ஜனநாயகத்தின் அடிப்படையாகும். இதனை வள்ளுவம்:

"சமன் செய்து சீர்துரக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி”

என்று கூறும். இன்று இந்தப் பண்பு நம்முடைய ஜனநாயகத்தில் காணக்கிடைக்கவில்லை. மாறுபட நினைப்பது ஒரு குற்றமாகக் கருதப் பெறுகிறது. இனிய செல்வ, அது மட்டுமா? பகையும் காட்டுகின்றனர். அதன் காரணமாக இன்று பல அநியாயங்களைக் கண்டும் காணாமல் போகவேண்டியிருக்கிறது; வாயிருந்தும் ஊமையாக இருக்க வேண்டியிருக்கிறது. இதனை எப்படி மக்களாட்சி என்று கூறமுடியும்? இனிய செல்வ, மக்களாட்சியில் நாட்டை ஆள்பவர்களைத் தேர்வு செய்து பொறுப்புத் தரவேண்டும். எப்படி ஆள்பவரைத் தேர்ந்தெடுப்பது? நாட்டை ஆளுதல் என்பது பொறுப்புள்ள பணி. ஆட்சிப் பொறுப்பு துன்பந்தருவது என்றார் இளங்கோவடிகள். இன்றோ ஆட்சிப் பொறுப்பேற்பது ‘சுகம்’ ஆகி விட்டது. மறைமுகமாக அதுவே ஒரு சொத்து ஆகிவிட்டது. என் செய்வது? இரங்கத்தக்க நிலை, இனிய செல்வ, நமது திருக்குறள் ஆள்பவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையைப் பற்றிக் கூறுகிறது.

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்ற திருக்குறளை நன்றாகப் படி! சிந்தனை செய்க!

ஆட்சிக்குரிய தலைவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றவர்கள் ஒரிடத்தில் கூடுதல் வேண்டும். கும்பலாக அல்ல; ஒருமை உணர்வுடையவர்களாகக் கூட வேண்டும். ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமையுளராகச் சேர்ந்து உலகியலை நடத்த வேண்டும். இனிய செல்வ,