பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



345


வளர்ந்த இலங்கைக் குடியரசுத் தலைவர் பிரேமதாசா இப்போது புதிய அரசியல் வியூகம் வகுக்கிறார். விடுதலைப் புலிகளுடன் சமாதானம் பேசத் தொடங்கியுள்ளார். இந்திய நாட்டை நம்பிய விடுதலைப்புலிகள், பிரேமதாசாவின் பிரதி நிதிகளாக இந்திய அமைதிப்படையை வெளியேறச் சொல்கிறார்கள்; பிரேமதாசாவுடன் கூடிக் குலாவுகிறார்கள். இந்தியப்படை இலங்கையில் இருந்து என்ன ஆகப் போகிறது? திரும்ப அழைப்பதில் தவறு இல்லை. ஆனால், எப்போது திரும்ப அழைப்பது என்பதே கேள்வி!

விடுதலைப்புலிகள் தமிழ் ஈழம் கேட்டல்லவா போராடினர். அந்தத் தமிழ் ஈழத்தை, இலங்கைக் குடியரசுத் தலைவர் ஒத்துக் கொண்டு அறிவித்து விட்டாரா? அந்தத் தமிழ் ஈழத்தில் தேர்தல் நடந்து, தலைவர் பிரபாகரன் தமிழ் ஈழத்தின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்று விட்டாரா? இந்தச் சூழ்நிலை உருவானால்தானே இந்தியப்படை வெளியேற இயலும்! தமிழர்களிடத்தில் ஒற்றுமை வந்து விட்டதா? விடுதலைப்புலிகளால் மற்ற இயக்கத்தினருக்கு ஆபத்து இல்லை என்ற உத்தரவாதம் கிடைத்து விட்டதா? தமிழ் ஈழம் கேட்கும் தமிழர்களிடையில் இனவழி ஒற்றுமை இல்லை. சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் பகை இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்களுக்குள்ளேதான் பகை மிகுதி. இந்தப் பகை நிலைமாறி ஒன்றுபட்டு விட்டார்களா? விடுதலைப் புலிகளின் எந்தெந்த லட்சியங்கள் நிறைவேற்றப் பட்டுவிட்டன. இந்திய அமைதிப்படை வெளியேற? இந்திய அரசு ஒரு தவறு செய்துவிட்டது. திருக்குறள் நெறி நிற்காத தவறுதான் அது.

"செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.”

(869)

நீதியை அறிந்து அவ்வழி அஞ்சாது பகைமைக்காக மட்டுமே அஞ்சும் பகைவரைப் பெற்றால் அவர்களைச் செறுத்து ஒறுத்தால் என்றும் இன்பங்கள் நீங்கா.