பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


43. மறைமலைநகரும் காமராசர் இரயில் நிலையமும்

இனிய செல்வ,

"எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு"

வாழ்க்கைப் போக்கில் சிக்கல்கள் தோன்றுவது இயற்கை; தவிர்க்க இயலாததும் கூட! ஆனால் சிக்கல்களுக்கு எளிதாகவும் பயன்தரத் தக்கவாறும் தீர்வு காண்பதே நல்லது. சிக்கலுக்குத் தீர்வுகாண்பதே வாழ்வாங்கு வாழும் கலை. மேலும் புதிய சிக்கல்கள் தோன்ற இடமளிக்காமலும் தீர்வு காண வேண்டும். அதிலும் சிக்கலைக் கடுமையாக்கினால் அந்தச் சிக்கலுக்கு நிகரானதொரு சிக்கலை உருவாக்கிவிடும். "மான”த்துடன் சிக்கலைக் கூட்டுச்சேர அனுமதித்துவிடக்கூடாது. ஒரு சிக்கலுக்கு மானத்துடன் கூட்டுக் கிடைத்து- விட்டால் மானம்-பிணக்கு, பகை, சண்டை ஆகிய பரிவாரங்களுடன் வந்து குடிபுகும், ஆதலால் வாழ்க்கைப் போக்கில் சிக்கல்கள் தோன்றி வளர்வதை அறிந்து கொள்ள வேண்டும்.

இனிய செல்வ,

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

"மறைமலை நகருக்குத் திரண்டு வாருங்கள்” என்று தான் நண்பர்கள், மாநாட்டுக்கு நம் எல்லாரையும் அழைத்தார்கள். இந்த உண்மையை காங்கிரஸ் மாநாட்டின் செய்தித்தாள் விளம்பரங்கள் ஐயத்திற்கிடமின்றி எடுத்துக் காட்டுகின்றன. மறைமலை நகரில் காங்கிரஸ் மாநாடு நடந்த இடத்திற்கு "காமராஜ் நகர்" என்று பெயர் சூட்டினார்கள். இது வரவேற்கத் தக்கதேயாம். காங்கிரஸ் பேரியக்க மாநாடு அகில இந்திய மாநாடு. ஆதலால், மாநாட்டுக்கென்று தனி