பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



469



இனிய செல்வ, இன்று நமது நியாய விலைக் கடைகளில் அரிசி விலை கிலோ ரூ. 4-75, கோதுமை விலை கிலோ ரூ. 4-50. இந்த விலை தமிழ்நாடு அரசு ஆதரவு விலைக்குரிய மான்யம் கொடுத்தபிறகு! இந்த விலை இன்று சராசிரி ஒரு நடுத்தர வகுப்பினனான ஏழைக்கு ஒத்துவருமா? அவனுடைய வாங்கும் சக்தி எப்படி இருக்கிறது? உலக நாடுகளிலேயே இந்தியாவில் தான் தனி நபரின் வருவாய் குறைவு. தனி நபரின் வருவாய்க்கும் நுகர்பொருள் விலைக்கும் இடையில் உள்ள இடைவெளி மேலும், மேலும் அகன்று கொண்டே போகிறது. நுகர்பொருள் மட்டுமா விலை ஏறி இருக்கிறது? இனிய செல்வ, சாதாரணமாகக் கிராமத்தில் "ஒரு கார்டு போடக்கூடாதா?” என்பர். ஆம்! ஒரு கார்டு-அஞ்சலட்டை 5 காசு 25 ஆண்டுகளுக்கு முன்! இன்று அஞ்சல் கட்டணங்களில் விலை ஏற்றம் உயர்வு! ஏன் உயர்த்துகிறார்கள்? என்பதே விளங்கவில்லை.

இனிய செல்வ, பொருளாதார இயக்கத்தின் செய்பாடாக விலை ஏறுதல் தவிர்க்க முடியாதது. ஆனால், எவ்வளவு, எந்த அடிப்படையில் விலை ஏறுகிறது? அரசுகள் மக்களிடமிருந்து தண்டல் செய்யும் வரிகளை மட்டுமே நம்பியுள்ளனர். இது முறையன்று. பொதுத் துறையை வலிமைப்படுத்தி வருவாய் காண வேண்டும். இனிய செல்வ, மதுவிலக்கு கொண்டு வந்தபொழுது அதனால் உருவான இழப்பை ஈடு செய்ய இராஜாஜி தமிழ்நாட்டில் விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார். தொடக்கத்தில் மிகக் குறைவாகவே விதிக்கப்பட்டிருந்தது. இன்று விற்பனை வரி பல்கிப் பெருகிவிட்டது. கூடுதல் விற்பனை வரி வேறு.

இனிய செல்வ, நமது நிலையே இப்போது அறச்சங்கடம்! கார் டயரும் விலை உயர்வு; பெட்ரோல் விலை உயர்வு; எண்ணெய் விலை உயர்வு! எல்லாமாகச் சேர்ந்து பயணச்செலவை உயர்த்துகிறது. கிலோ மீட்டருக்குக் குறைந்தது ரூ. 6 வாங்கவேண்டி யிருக்கிறது. இவ்வளவு தொகை கொடுக்கப் பல அமைப்புகளுக்கு சக்தியில்லை;