பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நலம்



61


உயிர்காப்பு முயற்சியில் முன்னணியில் நிற்கின்றன. உயிர் காப்பு முயற்சியின் அளவுக்கு ஒழுக்கப் பாதுகாப்பு முயற்சி கால்கொள்ளவில்லை. உயிரோடு வாழ்தல், வாழ்தலின் பயன் காண! அதாவது வையகம் பயனுற வாழ்ந்து நிலத்திடை நீள்புகழ்பெற. இதற்கு ஒழுக்கம் துணை செய்யும். உயிரோடு வாழ்ந்தும் ஒழுக்கமிலாமையால் நோய்களுக்கு இரையாகியும், சமுதாய ஒழுகலாறு இன்மையால் ஊரவர் பழி துற்றவும் வாழ்ந்து பயன் என்ன? இத்தகையோர் வாழாமையே கோடி தரும்.

குடிமை-குடிமைப்பண்பு- Citizenship என்பது புதிய நாகரிகத்தின் வடிவம். ஆனால் திருக்குறள் குடிமைப் பண்பு பற்றிப் பேசுகிறது.

"ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.”

(133)

அதாவது, நாடு தழுவிய நிலையில், ஒத்தது அறிந்து ஒழுகுதலே குடிமைப் பண்பு. நமது நாட்டுக்கு என்று சில நாட்டு ஒழுகலாறுகள் தேவை. முதலாவது நாட்டு ஒழுக்கம் சமயச் சார்பற்ற (secular) ஒழுக்கம். இரண்டாவது பல மொழிகளைக் கற்றல். மூன்றாவது சுதந்திரத்தை - ஜனநாயக மரபுகளைப் பாதுகாத்தல். இவைகளைத் தேசீய ஒழுக்கங்கள்-என்று கூறலாம். இந்த ஒழுக்கங்களை மேற்கொண்டு ஒழுகுவது இந்தியக் குடியுரிமை பெற்ற ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

23. ஒழுக்கமுடைமை

மனிதனை வளர்ப்பது ஒழுக்கம். மனிதனை உயர்த்துவது ஒழுக்கம். ஒழுக்கம் என்றசொல் மக்கள் மன்றத்தில் பரவலாகப் பேசப் பெறுவதே. தீய பழக்கங்கள் வேறு; ஒழுக்கம் வேறு. தீய பழக்கங்களை ஒழுக்கத்திற்குள் அடக்கலாம். ஆனால் ஒழுக்கத்திற்குள் தீய பழக்கம் வராது.