பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெரியவரினும் சிறந்தவராவர். உண்ணாநோன்பு முதலியன, தீமைகளுக்குக் காரணமாக உடல் அமையும்பொழுது அதை வருத்தித் திருத்துவதற்குத்தான். அதனால் உண்ணா நோன்பிருப்பதில் பயனில்லை. ஆதலால், உடலைப் பழக்கினால் மட்டும் போதாது. உணர்வுகளையும் பழக்கிக் கொள்ள வேண்டும்.

17. அழுக்காறாமை

அழுக்காறாமை என்பது, பிறர் ஆக்கமும் நலமும் கண்டு, மகிழும் பண்பின்றி, அவர் தம் ஆக்கத்தையும், நலத்தையும் கண்டு மனப் புழுக்கமுற்று அந்த ஆக்கத்திற்கும், நலத்திற்கும் இழுக்குக் கற்பித்தல், கேடுசெய்தல் ஆகியன கூடாது என்ற ஒழுகலாறுகளை வற்புறுத்துவது.

அழுக்காறாமையை ஒழுக்க நெறியாக மேற்கொள்ள வேண்டின் எல்லோரிடத்திலும் அன்பு காட்டும் அடிப்படைப் பண்பு தேவை. மற்றவர்கள் ஆக்கத்திற்கும் நலத்திற்கும் உதவியாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோள் தேவை. இத்தகைய பண்பையும் குறிக்கோளையும் பெற்றவர், ஏனையோர் ஆக்கமும் நலமும் பெறத்துணை செய்வர். அவர்கள் ஆக்கமும் நலமும் அடைந்துழித் தாமே பெற்றது போல மகிழ்வர். அதனால் மற்றவர் ஆக்கமும் நலமும் கண்டு அழுக்காறு கொள்ளாது மகிழும் பண்பு இயல்பாக அமையும்.

அழுக்காறு, ஒருவர் ஆக்கத்திற்கும் உதவி செய்யாது; மாறாகத் துன்பத்தையே தரும். ஆக்கம் என்பது அறிவறிந்த ஆள்வினையாலன்றி ஒரு பொழுதும் கைகூடுவதில்லை. அழுக்காறுடையவர் தமது ஆற்றலைத் தமது ஆக்கத்திற்குச் செலவழிக்காமல், மற்றவர் ஆக்கத்தை அழிக்கப் பயன் படுத்தலால், இவர்தம் ஆக்கமும் கெடுகிறது. மற்றவர் ஆக்கமும் கெடுதலால் அறம் செய்ய இயலாமையும், மற்றவர்