பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



107


ஆக்கத்திற்குக் கேடு செய்தலால் பாவமும் வந்து அமைகின்றன; அதனால் துன்பம் தழுவிய வாழ்க்கையே அழுக்காறுடைய வர்க்கு அமையும்; ஆதலால் அறமும், ஆக்கமும் வேண்டு வோர் மற்றவர் ஆக்கமும் நலமும் கண்டு புழுங்கற்க! மகிழ்க!

அழுக்காறு உடையாரை அழிக்கப் பகைவர் வேண்டியதில்லை. அவர்களை அழுக்காறே அழித்து விடும். ஆதலால் எப்பொழுதும் எந்தச் சூழ்நிலையிலும் மற்றவரின் ஆக்கமும் நலமும் கண்டு மகிழவே கற்றுக் கொள்க. இதுவே வாழும் வழி.

ஒருவர் நலங்கருதிப் பிறிதொருவர் கொடுப்பதை எக்காரணம் கொண்டும் தடுக்காதே. அங்ஙனம் தடுப்பவர் உறையுளும் உண்டியும் இன்றி அல்லற்பட்டு வருந்துவர். அவர் மட்டுமின்றி அவ்வழுக்காற்றுச் செயலுக்குத் துணையாய் அமைந்த சுற்றமும் கூடக் கெடும். ஆதலால் அழுக்காறுடையவராகவும் வாழ வேண்டாம். மற்றவர்களிடத்தில் அழுக்காற்றைத் தூண்டவும் வேண்டாம். எக்காரணத்தைக் கொண்டும் ஒருவர் பிறிதொருவர்க்கு வழங்குவதையோ, தமக்குக் கிடைக்காதது மற்றவர்க்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தாலோ தடுக்க வேண்டாம்.

அழுக்காறு உடையவன் வாழ்க்கையில் திருமகள் ஆட்சி செய்யமாட்டாள். ஏன்? திருமகளுக்கும் அழுக்காற்றுக்கும் நெடுந்தொலைவு. அழுக்காறுடையவன் இடத்தில் திருமகள் தங்கமாட்டாமல் மூதேவியை ஆற்றுப் படுத்தி விட்டு நீங்கிவிடுவாள்.

அழுக்காறுடையவன் பாவி. அழுக்காற்றின் காரணமாக உழைப்பின்றி வாழ்தலால் இம்மையில் செல்வம் வராது. செல்வம் இன்மையால் வறுமையுற்று, அழிதலால் தீயூழ்ப் பட்டு நரகத்தில் வீழ்வர். அதனோடு அழுக்காற்றின் காரண