பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுச்சி, திருக்குறள் இயக்கம் முதலியவற்றின் வாயிலாக, எழுச்சி மிக்க புதிய தமிழகத்தை உருவாக்கினார்கள். அடிகளார் அவர்களை

புரட்சித்துறவி

சிந்தனையாளர்

நூலாசிரியர்

சொற்பொழிவாளர்

நிறுவனர்

என ஐந்து நிலைகளில் வைத்து அடிகளாரின் பங்களிப்பை நாம் விளக்கலாம்; மதிப்பீடு செய்யலாம்.

புரட்சித்துறவி : தத்துவ தரிசனங்கள் அனைத்தையும் கற்றதோடு மார்க்சியமும் கற்றவர். சமூக இயலில் ஆழங்கால் பட்டவராதலால் தமிழ்ச் சமூக மாற்றத்திற்கு சைவ சமயம் வழியாக எவ்வாறு மேம்பாடு காணலாம் என உழைத்தார். தமிழ்வழிபாடு, ஆட்சிமொழி, பயிற்றுமொழி, இந்திஎதிர்ப்பு முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் தலைமையேற்று தமிழகத்திற்கு வழிகாட்டினார். அவருடைய எழுத்திலும், பேச்சிலும், புதுமைகள் பூத்துக் குலுங்கின. திருமடத் தலைவர்கள் பல்லக்கில் பவனிவந்தபோது பட்டி தொட்டிகளுக்கெல்லாம் அடிகளார் சைக்கிளில் சென்று சமயம் பரப்பினார். புரட்சித் துறவி அடிகளாரின் புரட்சிச் சிந்தனைகளை இந்த 10 தொகுதிகளிலும் நாம் காணலாம். நடைமுறைக்கு ஒத்துவராத சமயக் கருத்துக்களைத் துணிவோடு எடுத்துக்காட்டிய சமயப் புரட்சியாளர்.

சிந்தனையாளர் : தமிழ்ச் சிந்தனைக்குப் புதுவளம் சேர்த்தவர். திரு.வி.க. நெறியில் சமுதாய நோக்கில் சமயச் சிந்தனைகளை வழங்கியவர். பன்னூற் பயிற்சியும், பேரறிஞரின் நட்பும், தொடர்ந்த மேடைப்பொழிவுகளும், பட்டறிவும் அவருக்குப் பல்வேறு புதிய சிந்தனைகள் தோன்ற வாய்ப்பளித்தன. துறவியாய், தமிழறிந்த சான்றோராய் மட்டுமல்லாமல் மானுடம் மேன்மையுற வேண்டும் என்ற வேனவாவினால் எவர்க்கும் அஞ்சாமல், எதனையும் எதிர்பாராமல் புதிய சிந்தனை விதைகளைத் தூவினார்கள். அவை இன்று பூத்துக் குலுங்குகின்றன. அவரின் சிந்தனைகள் தனி நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.

நூலாசிரியர் : பல்வேறு காலங்களில் பல்வேறு இதழ்களில் அடிகளார் எழுதிய கட்டுரைகள் நூல்வடிவம்