பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



‘ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.’

220

ஒப்புரவினால் கேடு வரும் எனில் அக்கேடு விலை கொடுத்தாயினும் கொள்ளத் தக்கதேயாம்.

"ஒப்புரவினால் வரும் கேடு எனின்” என்றதால் ஒப்புரவினால் கேடு வராது என்பது திருவள்ளுவரின் முடிபு.

இதனை "வித்தும் இடல் வேண்டுங்கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்" என்று கூறியதாலும் அறிய முடிகிறது.

ஒப்புரவு நெறி நிற்காதொழியின் பழிவரும், அதனால் பழி நீங்கிய வாழ்க்கை பெற எந்த விலையும் கொடுக்கலாம் என்பது கருத்து.

23. ஈகை

ஈகை என்பது, துய்ப்பன பெறாது வறுமையால் வருந்துவோர்க்குத் துய்க்கும் பொருள்கள் கொடுத்து உதவுதலாகும்.

நமது குமுகாய அமைப்பு, செல்வத்தில் ஏற்றத் தாழ்வுள்ள குமுகாய அமைப்பாகும். ஒரு கோடியில் அடுக்கிய பலவளமும் மற்றொரு கோடியில் வருத்திக் கொல்லும் வறுமையும் இருப்பது நம்முடைய நாடு. இந்த நிலை சங்ககாலந் தொட்டே இருந்து வருகிறது. இத்தகைய சமுதாய அமைப்பில் ஈகை என்பது தவிர்க்க இயலாத அறம்; கடமை. ஏன்? செல்வத்தில் நிறைய ஏற்றத் தாழ்வில்லாத பொது உடைமை நாட்டிலே கூட, துய்ப்பதற்குரிய எல்லாப் பொருளும் எல்லாரிடத்திலும் இருக்காதல்லவா? வறுமையில்லாது போனாலும் பொருளில்லாமைக் குமுகாயம் ஈகையை அவாவி நிற்கும். அதுமட்டுமன்று. ஒருவர் வாழ்க்கை முழுமையாக வெற்றிபெற எத்தனை தேவைகள் உள்ளன! தேவை யென்றால் பொருள் தேவை மட்டுந்