பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



135


தானா? அறிவு, அன்பு, ஆற்றல், குணம் முதலியனவும் தேவை தானே! இவற்றை வழங்குவதும் ஒருவகையில் உதவி செய்தலாதலால் ஈகையின் பாற்படுத்தி எண்ணினாலும் தவறன்று.

ஈகை என்ற நல்லொழுக்கம் ஒருவரிடத்தில் தன்னலம் குறைந்து சமுதாய நலம் மிகும்பொழுது தோன்றக் கூடியது. ஒருவர், அன்பிற் சிறந்தவராகவும் செல்வத்தின் பயன் தெரிந்தவராகவும் இருக்கும்பொழுது ஈகைப் பண்பு தோன்றி வளரும்.

மற்றவர்கள் உண்பன. உடுப்பன இன்றி வருந்தும் துன்பமே ஈகை தோன்றுதற்குரிய வாயில்கள்.

மற்றவர்கள் படும் துன்பத்தை மாற்றும் வகையில் வேண்டியன கொடுத்து உதவி செய்ய வேண்டும். அங்ஙனம் கொடுத்து உதவி செய்யும் பொழுது, வறுமையிலிருந்து மீளத்தக்க வகையில் உதவி செய்ய வேண்டும்.

உதவி செய்வதற்குரிய தகுதி, வறுமையில் வருந்துவதைத் தவிர வேறு எந்தக் காரணமும், காரணமாக அமையக் கூடாது.

ஈகை அறம் செய்யும் பொழுது, செல்வ இழப்பு ஏற்படுகிறது. இங்ஙனம், செல்வ இழப்பு ஏற்படாமல் இருக்க தொடர்ச்சியான பொருள் செயல் முயற்சிகளை மேற்கொண்டு பொருள் ஈட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

யாருக்கு உதவி செய்யப்படுகிறதோ அவர் பெற்ற உதவியைக் கொண்டு வளராமையின் காரணமாக வெறுப்புத் தோன்றும். இந்த வெறுப்பை அடக்கிக் கொண்டு அவரைப் பக்குவப்படுத்தி வளர்க்கத் தொடர்ந்து அவருடன் போராட வேண்டும்.

ஈகை அறம் இயற்றும்பொழுது தமது உதவியைப் பெற்றவரிடம் திரும்ப ஓர் உதவியைத் தாம் எதிர்பார்க்கக் கூடாது.