பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நன்றிக் கடப்பாடு, புகழ் முதலியவற்றைக் கருதியும் ஈகை செய்தல் கூடாது.

சார்புகள் வழிச் சிக்கிய நிலையில் உதவி செய்தல் அல்லது செய்யாமை மேற் கொள்ளுதல் கூடாது.

ஈகை அறம் முறையாக நிகழ்வதன்மூலம் சமுதாயத்தில் வறுமை நீங்கும்; அன்பு பெருகும்; சமுதாய உறவுகள் வளரும்; சமுதாயம் அமைதியான சூழ்நிலையில் நடைபோடும்.

தனிமனிதனுடைய மேம்பாட்டுக்கும் சமுதாயமேம் பாட்டுக்கும் ஒரு சேர ஈகை உதவி செய்வதால் அது சிறந்த அறம்.

‘வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.’

221

வறுமையின் வாய்ப்பட்ட ஏழையர்க்குச் செய்வதே ஈகை. இங்ஙனமல்லாது கொடுப்பது எல்லாம் யாதானு மொன்றை-யாதானுமொரு பொருளைத் திரும்ப அடையும் வகையில் வழங்கப்பெறும் கடனேயாம்.

பொருள் இல்லாதார் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கே ஈகை என்ற அறம். ஆதலால், வறுமையுடையோரைக் கண்டால் அலட்சியப்படுத்தாது அவர்களுக்குக் கொடுப்பது தான் அறம்; இங்ஙனம் கொடுப்பதே இம்மையிலும் மறுமையிலும் பயன்தரும்,

‘நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.’

222

பிறரிடத்திலிருந்து வாங்குவது வீட்டுலகத்திற்குச் செல்வதற்குரிய நல்வழியென்று அறநூல் கூறினாலும் பிறரிடமிருந்து கொள்ளுதல் தீயதே. பிறருக்குக் கொடுப்பதால் மேலுலகத்தைப் பெறமுடியாது என்று கூறினாலும் கொடுத்தலே நல்லது.