பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



161


முடியும் என்ற நம்பிக்கை தோன்றாது. ஆதலினாலே பழந்தமிழ் இலக்கியத்திலே சில இருக்கின்றன என்று கருதிப் பெருமை கொள்வதிலே ‘இடம், பொருள் கருதி’ தவறா சரியா என்று கொள்ள வேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாகக் கொள்ள முடியாது. பழந்தமிழ் இலக்கியங்களிலே அறிவியல் செய்திகள் உண்டு.

மாணிக்கவாசகர் திருவாசகம் பாடுகிறார். பக்திப் பண் ஒலிக்கிறது.

அதிலே இரும்பைக் காந்தம் இழுக்கிறது என்ற விஞ்ஞானத் தகவல் கிடைக்கிறது. இதை அழகாகப் பாடுகிறார்;

‘இரும்பு தரு மனத்தேனை
ஈர்த்து ஈர்த்து என் என்புருக்கி’

என்று.

இழுத்தல் என்றால் கைபோட்டு இழுப்பது. ஈர்த்தல் என்றால் கண்ணுக்குப் புலனாகாத ஒரு ஆற்றல் இழுப்பதற்கு ஈர்த்தல் என்று பெயர்.

இரும்பு காந்தத்தை இழுக்கும். இரும்பை இழுக்கக் கூடியது காந்தம் ஒன்றுதான்.

அது இழுக்கிற பொழுதுகூட ஈர்த்தல் என்றார்.

இதிலிருந்து, காந்தம்-காந்தத்தினுடைய ஆற்றல் இவற்றை ஆராய்ந்து இருந்தால் இந்த நாடு இந்நேரம் கொஞ்சம் முன்னுக்குப் போயிருக்கும்.

திருத்தக்கத்தேவர் மயிற்பொறி பற்றிப் பாடினார். மயிற்பொறி என்று ஒன்று இருந்தது. அது வானிற் சென்றது. சீவகன் இயக்கினான். ஆனால் இலக்கிய உலகம் அதற்குப் பதவுரை, பொழிப்புரை, இலக்கணக் குறிப்பு, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் கண்டது.

தி.iv.11