பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை
தவத்திரு பொன்னம்பல அடிகளார்

அருள் நெறித் தந்தை, தமிழ்மாமுனிவர் இருபதாம் நூற்றாண்டின் அப்பரடிகள், மனிதநேய மாமுனிவர், காவி உடுத்திய கார்ல் மார்க்ஸ் எனப் பலவாறு அழைக்கப்பெற்ற நம் குருமகாசந்நிதானம் அவர்கள் எழுதிய பல்வேறு நூல்கள் இன்று தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. திருக்குறளைப் பற்றிய பல்வேறு சிந்தனைகள் இன்று செறிவாகச் சீர்செய்யப்பட்டு, சிறப்புடன் நமது கரங்களில் தவழ்கின்றது. பேச்சே வாழ்க்கை, வாழ்க்கையே பேச்சு என்று உலக உபதேசியாக மட்டும் இராமல் பேசியதை வாழ்வில் நடைமுறைப்படுத்திச் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியில்லாத செயற்கரிய செயல்களை ஆற்றிய அருந்தவ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

உலக உயிர்கள் நலம்பெற உபதேசித்த அப்பர் அடிகளும், சுவாமி விவேகானந்தர் பெருமானும், வள்ளலார் பெருந்தகையும் எந்த அடைப்புக் குறிகளுக்குள்ளும் தம்மைச் சிறைவைத்துக் கொள்ளவில்லை. மடங்கள் என்ற நிறுவனங்களில் தங்களைச் சிறைவைத்துக் கொள்ளாமல் சுதந்திர வானில் சுடர் விட்டுப் பிரகாசித்தார்கள். பட்டு, பீதாம்பரங்களை அணிந்துகொண்டு பல்லக்கில் பவனிவரும் - காலத்திற்கு ஒவ்வாப் பரம்பரை மரபுகளை மறுதலித்துவிட்டு, தம் கடமைக்குரிய மரபுகளை வழுவாது நிறைவேற்றி, தம் பாதங்கள் நோகப் பாலைவனத்தில் பயனம் செய்து பாமர மனிதனின் வாழ்வை வளப்படுத்தச் சிந்தித்துச் செயலாற்றிய சமய சமுதாய உலகில் முதல் திருமடத்தின் தலைவர் நம் அருள்நெறித் தந்தையேயாவார். சுவாமி விவேகானந்தர் பெருமானும், வள்ளலார் பெருந்தகையும் மடாதிபதிகளாய் இருக்கவில்லை! திருமடத்தின் பொற்கூண்டுக்குள் மரபுகள் எனும் கத்திரிகள், சுதந்திரச் சிறகுகளை வெட்டிய பொழுதும் அதையும் தாண்டி, உலக மக்களின் ஆன்ம விடுதலைக்கு வித்திட்டு, வேதம் புதுமை செய்த மடாலயத் தலைவர் தாம் நம் மகாசந்நிதானம்! வளர்ந்து வருகின்ற உலகில் பேச்சும் எழுத்தும் வாழ்க்கை வாணிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது, சமுதாய மாற்றங்களுக்கு விதைக்கின்ற நாற்றங்காலாக அவற்றை மாற்றிக் காட்டினார்கள். உருவமும், கோலமும் அடையாளமும் மட்டும் அல்ல துறவு நெறி! எண்ணும் எண்ணதால் நினைக்கும் உள்ளத்தால், வாழும் வாழ்க்கை முறையால் வாழ்வதுதான் உண்மைத் துறவு நெறி என்று துறவிகளிடம் மிக்க