பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆர்வமும், அதன் வழிப்பட்ட முயற்சிகளும் இளைத்துப் போகின்றன. ஆதலால், திருவள்ளுவர், தன் முயற்சியால் ஈட்டிய பொருளைக்கொண்டு விருந்தோம்பல் முதலியவற்றைச் செய்ய வேண்டும் என்கிறார். "தாளாற்றித் தந்த பொருளெல்லாம்" என்பது குறள். காதலிருவர் கருத்தொருமித்துக் கூடி மகிழும் காதல் இன்பத்திற்கு எடுத்துக் காட்டாகத் திருவள்ளுவர் ‘தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால்’ என்ற குறட்பாவைச் செய்துள்ளார்; அதாவது, தான் முயன்று ஈட்டிய பொருளில் தன்னாலேயே கட்டப் பெற்ற சொந்த வீட்டில் தன் முயற்சியால் ஈட்டிய பொருளைக்கொண்டு அறுசுவை உணவாக்கிப் பலரோடு இருந்து கூடி மகிழும் இன்பம் போன்றது காதலின்பம் என்று குறிப்பிடுகிறார். ஆதலால் முயற்சியின் வழி வருவதே செல்வம் என்ற அடிப்படை உணர்வு மக்களிடத்தே பெருகி வளர வேண்டும்.

பொருள் தேடினால் மட்டும் போதாது; தேடக் கூடிய வழிகளிலும் தேட வேண்டும். அறமல்லாத வழிகளில் பொருள் ஈட்டுவதால் தவறுகள் பெருகுவதோடு தாளாண்மையும் குறைகிறது. பொருள் வருவதற்குரிய புதிய புதிய வழிகளைக்கண்டு அவ்வழிப் பொருளீட்ட வேண்டும். ஈட்டுதலைவிடப் பொருள் வருவதற்குரிய புதிய வழிகளைக் காணுதல் அவசியமாகும். அதனாலன்றோ திருவள்ளுவர், ‘இயற்றலும்-ஈட்டலும் காத்தலும் காத்து வகுத்தலும் வல்லது அமைச்சு’ என்று குறிப்பிடுகின்றார். ஒருவர் ஒரு துறையில் முயன்று பொருள் ஈட்டினால் அவ்வழிகளையே மற்றவர்களும் பின்பற்றக் கூடாது. அப்படிப் பின் பற்றினால் புதிய வாயில்களைக் காணும் ஆர்வம் குன்றும்; முயற்சி தடைப்படும்; மேலும், ஆரோக்கிய மில்லாத போட்டிகள் ஏற்படும். இதனை இன்று நம் நாட்டில் பெருகி வளர்ந்துள்ள வணிகத் தொழில் மூலம் அறியலாம். ஆதலால், பொருள் வருவதற்குரிய வாயில்களைக் கண்டுபிடிக்கும் புதிய