பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வானொலியில்



271



பொதுவாக இன்று, பஞ்சம் உடைமைகளுக்கு அன்று. அன்பு கலந்த உறவுக்கே பஞ்சம். உடைமை உணர்வு பூதாகாரமாக வளர்ந்திருக்கிறது. அஃது உறவுக்குப் பதில் பகையை வளர்த்து வருகிறது. தொன்மைக் காலத்தில், உடைமை, உரிமை, நடைமுறை, நிர்வாக நலன் கருதியே தோன்றிற்று. உடைமை யுரிமையுடையவர்களே அனுபவத்திற்கும் உரியவர்கள் என்பது பொருந்தாத நெறிமுறை. பெரும் பொருள் பெற்று வந்த பெருஞ்சித்திரனார். “ஏற்றுக உலையை ஆக்குக சோறே! என்னோடும் சூழாது எல்லார்க்கும் கொடுமதி மனைகிழவோயே!” என்று கூறினார். ஏன்? செந்தமிழ் உலகம் “செல்வத்தின் பயனே ஈதல்” என்றும், “தாமே துய்ப்பது அன்று” என்றும் முடிவு செய்தது.

எந்த உடைமை இருந்தாலும் அல்லது இல்லாது போனாலும் கவலையில்லை. மனிதன் மகிழ்ச்சியோடு வாழ முடியும். அவனுக்கு ஒன்றின்மீது மட்டும் உரிமையிருக்குமானால், அந்த ஒன்று எது? காணியா? இல்லை! காசுகளா? இல்லை! கடைகளா? இல்லை! ஆலைகளா? இல்லை! தொழிற்சாலைகளா? இல்லை! ஆடு மாடுகளா? இல்லை! பொன் மணிகளா? இல்லை! பின் என்னதான் அது? வேறொன்றுமில்லை. நமது உள்ளம்தான். உலகத்தையே உரிமை பெற்றிருந்தாலும், நமது உள்ளத்தினிடத்து நமக்கு உரிமையில்லாது போகுமானால் எந்த உரிமையும் நிலை நிற்காது. அதனாலன்றோ,

‘உள்ளம் உடைமை உடைமை’

என்றது வள்ளுவம். இந்த உலகத்திலேற்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும், இன்று நம்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்கும், மூலமும் முதலும் உள்ளமேயாகும். நிலத்தின் இயற்கையும் செயற்பாலதேயாம். அறிவுப் புலனும் ஆற்றலுக்குரியதே யாகும். ஏன்? கோயிலில் கடவுளும் மனிதனின் படைப்பேயாம். நமது உள்ளத்தில்