பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வருவது ஒருபுறம் இருக்க, அவர்களுடைய படை, பரிவாரங்களால் துன்பம் வரக்கூடாது. இன்று நம்முடைய நாட்டில் இத்தகு துன்பம் மிகுதியாக இருப்பதை நடைமுறையில் அனுபவிக்கிறோம். ஏன்? தன் எதிரியை ஒழித்துக்கட்டவே அரசியல் கட்சிகளில் சேர்கிறார்கள். ஒருவர், தன் பகைவரைக் கூட எளிதாகப் பழிவாங்கக் கூடிய வாய்ப்பு நாட்டில் அமைதல் கூடாது. அத்தகைய பழிவாங்கும் செயல் நிகழாதவாறு அரசு பாதுகாப்பு வழங்கவேண்டும். கள்வரால் வரும் துன்பம் அறவே கூடாது. இன்று கள்வர் எங்கு இல்லை! மற்றும் கொடிய விலங்குகளாலும் நச்சுயிர்களாலும் கூட ஆபத்து வராமல் பாதுகாப்பு வழங்கப் பெறுதல் வேண்டும். இத்தகைய பாதுகாப்பு நிறைந்த நாடே நல்ல நாடு.

அடுத்து, திருவள்ளுவர் தள்ளா விளைநிலம் உள்ள நாட்டை வரவேற்கிறார். நிலம் பொதுவே. நிலம், தள்ளா விளையுளாக மாறவேண்டுமானால் அங்கு நல்ல அறிவறிந்த ஆள்வினையுடைவர்கள், உற்பத்தி சார்ந்த உழைப்புடையவர்கள் வாழ்தல் வேண்டும். தள்ளா விளையுளை முறையாகப் பயன்படுத்தி, பயன்கொண்டு வையகம் பயனுற வாழ்வோரே தக்கார். ஒரு நாட்டில் செல்வர்கள் வாழ்வார்கள். அந்தச் செல்வர்கள் தாழ்விலாச் செல்வர்களாக விளங்குதல் வேண்டும். வஞ்சனையான வழிகளில் பொருள் செய்வோரும், பிறர் அழக் கொள்பவர்களும், பிறர் பங்கைத் திருடுபவர்களும் சமுதாய விரோதிகள். தாமே உழைத்துப் பொருளீட்டுபவர்கள் தாழ்விலாச் செல்வர்கள். இங்ஙனம் ஒரு நாடு சிறந்து விளங்குதலுக்குரிய இயல்பினைத் திருவள்ளுவர் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

‘தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.’

(731)

இத்தகு நாடாக நமது நாட்டை நாம் உருவாக்க வேண்டும்.