பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1
திருக்குறள் வாழ்க்கைச்
செயல்முறைக் குறிப்புகள்

1. கடவுள் வாழ்த்து

திருக்குறள், கடவுளை நம்பித் தொழுதலை ஏற்றுக் கொள்கிறது. திருக்குறள் நெறியில் கடவுள் வழிபாட்டுக்கு உருவம் இன்றியமையாததன்று; பெயர் இன்றியமையாத தன்று. உருவமாகிய பற்றுக் கோடின்றிச் சிந்திக்க இயலாதார் உயிரினங்களைத் தாங்கி யருளும் திருவடிகளை மட்டும் வைத்துக் கொள்ளலாம். (திருப்பெருந்துறையில் திருவடி வழிபாடு இருப்பது அறிக) வழிபடுவோர்க்குச் சுற்றுப்புறச் சூழ்நிலைத் தூய்மை இன்றியமையாதது. காற்று மண்டலத் தூய்மைக்கும், இனிய சூழ் நிலையைப் படைக்கவும் நறுமணப் புகையைப் பயன்படுத்தலாம். வேறு எப்பொருளும் - படையல் பொருள்கள் உட்படத் தேவையில்லை. காலையில் கதிரவன் எழும் நேரமும் மாலையில், கதிரவன் படும் நேரமும் ஏற்றன. இயலாதார் காலையில் எழுந்தவுடனும், இரவில் படுக்கப் போகும் முன்னும் செய்யலாம். ஒருவகையில் பின் குறிப்பிட்டுள்ள நேரம் அதிக நன்மை தரும.