பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களை எடுத்துக் கொண்டுபோய் வழங்கு! நலம் கேள்! நலம் செய்! அன்பாகப் பேசு! மாதத்தில் சில நாள் உன் வீட்டுக்கு அழைத்து வா! நல்ல வண்ணம் உபசரணை செய்! அவர்கள் உவப்பன செய்! ஆல் போல் தழைத்துக் குடும்பம் வளரும்; உறவு வளரும்.

குடும்பத்தின் வளர்ச்சிப் படிகளில் ஏறும்பொழுதெல்லாம் அவர்களிடம் ஆலோசனை பெறத் தவறாதே! நல்ல நாள்களில் குடும்பத்துடன் வந்து மாமனார், மாமியாரை வணங்கி வாழ்த்துப் பெறவும் தவறாதே! நல்ல குடும்பப் பாங்குடன் நடந்து கொள்! வெற்றி பெறுவாய்.

10

மகிழ்ச்சியுடன் உன் மனையறம் சென்று கொண்டிருப்பது மன நிறைவைத் தருகிறது. மகிழ்ச்சியைத் தருகிறது. அதுசரி! குடும்ப வரவு-செலவு இருக்கிறது. குடும்பப் பொருளாதாரம் முக்கியமானது. அதனால் வரவு- செலவுத் திட்டமிட்டுக் குடும்பத்தை நடத்துகிறாயா! நமது நாட்டு அரசாங்கங்களைப் போலப் பற்றாக்குறை நிதி நிலையுடன் வாழ்கிறாயா? நாட்டின் அரசுகளுக்குப் பற்றாக்குறை வரவு-செலவுத் திட்டம் இருப்பது நல்லதல்ல. ஆயினும் தீமையாகாது. ஏன் எனில் பரந்துட்ட மக்கள் தொகையுடன் சம்பந்தப்பட்டது, அரசின் வரவு - செலவுத் திட்டம். ஆனால், குடும்பம் வரவுக்குத் தக்க செலவுதான் செய்ய வேண்டும். குடும்பப் பொருளாதாரத்திற்குப் பிறிதொருவரை, நெருங்கின சுற்றத்தாரைக்கூட, தந்தை, தாய், மாமன் மாமியாரைக் கூடச் சார்ந்து வாழ்தல் கூடாது. அதனால் திருவள்ளுவர், குடும்பத் தலைவியை “வளத்தக்காள் வாழ்க்கைத்துணை” என்றார். முன்பு ஒரு கடிதத்தில் இதுபற்றி எழுதியிருப்பதை மீண்டும் படி.