பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறள் நூறு



363



உயிர் வாழ்க்கையைக் காலம், நாள் என ஒன்று போல எண்ணிக்காட்டி அறுத்து அழிப்பதை அறிவுடையார் உணர்வர்.

பொருள்

வாழ்நாள் முழுமையாக அழிவதில்லை; இன்று, நாளை என்று நாட்கணக்கில்தான் அழிகிறது.

39. யான் என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.

346

‘நான்’ என்ற தன் முனைப்பின் வழியும், ‘எனது’ என்ற உடைமைப் பற்றின் வழியும் வரும் செருக்கை நீக்குவார். வானோர் உலகினும் உயர்ந்த உலகத்தை அடைவர்.

பொருள்

‘நான்’ என்ற அகப்பற்றும், ‘எனது’ என்ற புறப்பற்றும் நீக்குதற்குரியன.

40. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

360

காமம், வெகுளி, மயக்கம் என்னும் குற்றங்கள் முற்றாகக் கெடின் பிறவித்துன்பம் கெடும்.

பொருள்

காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றங்கள் பெயரளவில் இருந்தால்கூடத் தீமையே செய்யும். ஆதலால் ‘நாமம் கெடக்கெடும் நோய்’ என்றார்.

41. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்ப(து) இல்.

363

இவ்வுலகில் வேண்டாமையை ஒத்த சிறப்புடைய செல்வம் வேறில்லை; அதற்கு ஒப்பான ஒன்று எங்குமில்லை.