பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறள் நூறு



365



ஒருவன் தன் மனக்குற்றம் நீங்குவதற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுத்து, குற்றம் நீங்குகிற வரையில் கற்க வேண்டும். குற்றம் நீங்கிய நிலையில் நிலைத்து நிற்க வேண்டும்.

பொருள்

மனக்குற்றம் நீங்கக் கற்பதே கல்வி.

45. அரங்கின்றி வட்டாடி யற்றே, நிரம்பிய
நூலின்றி கோட்டி கொளல்.

401

அறிய வேண்டுவனவற்றையெல்லாம் அறிதற்குரிய நூல்கள் பலவற்றையும் கற்காமல், அவையிடத்து நின்று ஒன்றைச் சொல்வது, சதுரக்கோடின்றி வட்டாடியதை யொக்கும்.

பொருள்

வட்டாடுவதற்கு அரங்கு தேவை; அவையிலே பேச அறிவு தேவை.

46. எனைத்தானும் நல்லவை கேட்க: அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

416

அளவிற் சிறிதானாலும் நல்லனவற்றைக் கேட்க வேண்டும். கேட்ட அளவிற்கு நல்லவை நிறைந்த பெருமையைத் தரும்.

பொருள்

அரிதின் முயன்று நல்லனவற்றைக் கேட்பது, பெருமை பெறுதற்குரிய வழியாகும்.

47. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

423