பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறள் நூறு



371



பொருள்

தவற்றுக்குப் பெரிய தண்டனை கிடைக்கும் என்ற அச்ச உணர்வும் தண்டிக்கும் போது அழிவு நேராவண்ணம் தண்டிக்கப்படுதலும் ஆக்கத்திற்குப் பாதுகாப்பாகும்.

63. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.

578

தத்தமது கடமை கெடாமல் கண்ணோட்டம் செய்ய இயலுமாயின், அவர்க்கு இந்த உலகம் உரிமையாகும்.

பொருள்

கடமைக்கு இடையூறு இல்லாத கண்ணோட்டமே வரவேற்கத் தக்கது.

64. வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வ தொற்று.

584

தம்தொழிலைச் செய்கின்றவர், சுற்றத்தார், பகைவர் என்ற வேறுபாடு இன்றி அனைவரையும் ஆராய்ந்து அறிவதே ஒற்று எனப்படும்.

பொருள்

சுற்றத்தார் தோற்றத்தில் பகைவரும் இருக்க இயலும். எனவே வேறுபாடின்றி ஆய்க.

65. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

592

பொருளுடைமைக்குக் காரணமாகிய ஊக்கமே நிலையான உடைமை. பொருளுடைமை நிலைத்து நிற்பது நீங்கிப்போகும்.