பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



2. குடும்ப வாழ்க்கையில் ஒரோ வழி இன்பங்கள் குறையினும் துன்பங்கள் வரினும் அவை காரணமாகச் சோர்ந்து விடாமல் எழுச்சியுடன் கடமைகளைச் செய்து குடும்ப வாழ்க்கையைச் சீரமைத்தல்.

‘சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.’

57

மகளிரைச் சிறை வைத்துக் காக்கும் காப்பு என்ன செய்ய இயலும்? மகளிர் தம் கற்பினால் காத்துக்கொள்ளும் காப்பே தலையாயது.

பெண்களை அவர்கள் கற்புக் கெடாதவாறு பாதுகாக்க வீட்டிற்குள் அடைத்து வைத்துக் காத்தல் பயனைத் தராது. பெண்கள் தம்மை அவர் தம் கற்பொழுக்கத்தால் காத்துக் கொள்வதே தலையாயது.

வீட்டிற்குள் சிறை வைத்திருக்கும்போது அவள் உள்ளத்தால் நினைந்தொழுகினும் கற்பு நலம் குன்றிடும். அவ்வழி உரியவளிடத்தில் ஒழுகும் கற்பொழுக்கத்தில் சிதைவு தோன்றும். உடலினால் கெட்டால் மட்டும் கற்பு கெடுதல் இல்லை. உள்ளத்தால் நினைத்தாலும் கெடுகிறது. அதோடு உரியவனிடத்தில் ஒழுகும் கற்பொழுக்கத்தின் தரம் குறைந்தாலும் கற்பு கெட்டது போலவேயாம்.

கணவன் தன் மனைவியைச் சிறைப்படுத்தி வைப்பதனால் புறநிலைகளைக் காண - மகிழ அவளுக்கு ஆவல் தோன்றும். நேரிடையாக ஆவல்கள் நிறைவு செய்யப் பெறாது போனால் புறவழிகளைக் காணவும் அவ்வழி கற்பொழுக்கம் கெடவும் வாயில் அமையும். அதோடு அவர் தம் மனம், நிறைவும் மகிழ்வும் பெறாதபோது அன்பொழுக்கத்தில் குறைப்படுதலும் கற்பொழுக்கத்தின் குறையேயாம். ஆதலால் வீட்டிற்கு வெளியே இயற்கைக் காட்சிகளையும் அறவோர் காட்சிகளையும் கண்டு மகிழத் தக்கவாறு மனைவியை அழைத்துச் செல்க.