பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆகியனவற்றை உட்கோளாகக் கொண்டால் முகமலர்ச்சி வராது.

ஆதலால், அன்பு நிறைந்த உள்ளத்துடன் ஒருமை உணர்வுடன் வரவேற்கவும் அகமும் முகமும் மலர்ந்தவழி இனிய சொற்கள் தம்மியல்பாகவே வரும்.

பொருள் தேவையே பெரிது. ஆயினும் பொருளைவிட அகமும் முகமும் மலர்ந்த வரவேற்பும் இன் சொற்களுமே விரும்பத்தக்கன.

‘முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.’

93

யாவரையும் விரும்பி மலர்ந்த முகத்துடன் இனிதாக நோக்கி, பின் மனமும் வாக்கும் ஒத்து இனிய சொல்லைச் சொல்லுதலே அறம்.

1. எந்த வகையாலும் கடுகடுத்த முகத்தைத் தவிர்க்கவும்.

2 மலர்ந்த முகத்துடன் வரவேற்கவும்.

3. இனிய சொற்களைப் பேசவும்.

4. பொருள்தருதல் - தராமை; அறிவுறுத்தல், அச்சுறுத்தல் ஆகிய செயல்கள் எப்படி அமையினும் மலர்ந்த முகமும் இனிய சொற்களும் குறைகளை நீக்கி நிறைகளைத் தரும்.

‘துன்புறுஉந் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.’

94

எல்லாரிடத்தும் இன்பம் விளைவிக்கும் இன்சொல்லை உடையார்க்குத் துன்பத்தை விளைவிக்கும் வறுமை இல்லையாம்.

1. ஒருவர் இயற்றும் செயல்களின் விளைவே பட்டறிவுக்குரியது. பிறரை இன்புறுத்துபவர்கள் ஒருகாலும் துன்புறமாட்டார்கள்.