பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

173


பழி சுமத்தப்பட்டபோது பாண்டிய அரசுதான் தவறு செய்துவிட்டது என்று ஐயத்திற்கு இடமின்றித் துணிகிறாள்.

இத்தகைய சால்பு, பழகிய பலரிடத்தில் காண்பது அரிது. அவர்கள், இயல்பில் குற்றம் காண்பவர்கள். எனவே, “இல்லாமலா இருக்கும் அல்லது இருக்குமோ?” என்று ஐயப்படுவார்கள். கண்ணகிக்கு ஐயத்தின் அடிச்சுவடேயில்லாத நம்பிக்கை கோவலனிடத்தில்!

கோவலன், தன்னைப் பிரிந்து துன்புறுத்தினானாயினும், அவள் அத்துன்பத்தைத் தாங்கி, தவம் செய்தாளே தவிர, கோவலனுக்கு இம்மியும் நெஞ்சத்தாலும் தவறிழைக்க வில்லை. தான் தவறிழைக்காததோடு மற்றவர் தவறிழைத்த பொழுது, தான் அத்தவற்றைத் தாங்கமுடியாது சினந்து எழுகின்றாள்.

பூம்புகாரில், ஆழ்கடலின் அமைதி போலிருந்த கண்ணகி, மதுரை நகரில் சினந்து எழுகிறாள்; எரிமலையெனக் குமுறுகிறாள். பூம்புகாரில் கோவலன் மாதவி ஆகியோர் தனக்கிழைத்த தீமையைத் தாங்கிக் கொண்டாள். ஆனால், மதுரையில் தன் கணவன் கோவலனுக்கு இழைத்த தவற்றை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கண்ணகியின் தன்னல மறுப்பும் கோவலனுக்காகவே வாழ்ந்த தியாக உணர்வும் இதனால் புலப்படுகின்றன. கோவலன் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தவுடன் அவள் நெஞ்சத்தில் குமுறல் எழுந்தது கொலையால் அல்ல; பழி தூற்றலாலேயாம். இதனை,

“மன்பதை அலர் துரற்ற மன்னவன் தவறிழைப்ப
அன்பனை இழந்தேன் யான் அவலங் கொண்டழிவதோ”

(துன்பமாலை-36-37)

என்று கூறுகிறாள். ஒரு நாட்டு அரசு தவறு செய்து விட்டது என்று நம்புகிறாள். ஆனால், தன் கணவன் தவறு