பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அண்மைக் காலத்தில் நம்முடைய நாட்டைப் போர் வருத்திய போது, நம்முடைய நாட்டின் பிரதமராக விளங்கிய அமரர் சாஸ்திரியார் அவர்கள் ‘ஜெய்கிஸான்’ என்று சொன்னதை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

உழவர் உழுபயன் மிகுந்து விளங்க, வான் மழை பெய்ய வேண்டும்; பெய்தால் மட்டும் போதாது; பெய்யும் காலத்தில் பெய்ய வேண்டும். மழை பெய்யாது போனாலும், காலம் மாறி மழை பெய்தாலும் சங்க காலத் தமிழர், ‘பாழாய்ப் போன வானம்’ என்று வானத்தைப் பழிதூற்றார்.

மழை பெய்யாமைக்குக் காரணம் நெறிமுறை தவறிய மக்களும், அரசுமே என்பது சங்க காலத் தமிழர் கருத்து. மக்களும், அரசு வழியினராதலின் அரசையே மிகுதியும் பழி தூற்றுவர். ஆதலால் மக்கள் தூற்றாத அரசாக அமைய வேண்டும் என்று எடுத்துக் கூறினார்.

தனிப்பட்டோர் வாழ்க்கையிலும், பேரரசுகளின் வாழ்க்கையிலும்கூட மிகுதியும் கெடுதல் செய்வோர் கோள் சொல்வோரேயாம். கோள் சொல்பவர்கள் யாருக்கும் இனியராக இருக்க மாட்டார்கள்; அயலவர்கள் ஆகி விடுவார்கள்.

கோள் சொல்லுபவனை, நச்சுப்பாம்பு போன்றவன் என்றே உருவகம் செய்கிறது இலக்கிய உலகு. நச்சுப் பாம்பனைய அவனிடம் செவியைக் கடிக்கக் கொடுக்கும் ஒருவன், அக்கணமே இறந்தவனை ஒத்தவனாகிறான் என்பது இலக்கியக் கருத்து. இங்ஙனம் கோள் சொல்லிப் பிழைப்பவர்கள் தீயவர்கள். கோள் சொல்பவர்களை ஒழிக்க வேண்டுமானால் அவர்களைத் திருத்த முயல்வது பயன் தராது; திருத்தவும் முடியாது.

கோள் கேட்பவர்கள் தாம் திருந்த வேண்டும். கோளினைக் கேட்பவர்கள் இல்லாது போனால் கோள் சொல்பவர்கள் ஏது? குடும்பங்களும் நிறுவனங்களும்