பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தமிழர் வாழ்வியல்

25


அறுவடை செய்து, முறையாகச் சோறாக்கி யானையைக் கட்டி உணவு கொடுத்தால்!

இங்ஙனம் செய்யத் தவறி யானையையே நெல் வயலுக்குள் புகுந்து தின்ன அனுமதித்தால் மிகப் பெரிய பரப்பளவுள்ள நிலமேயாயினும் யானைக்கும் போதாது. ஏன்? யானை உண்டதைவிட யானையின் கால்பட்டு அழிந்த உணவுப் பொருளே மிகுதி.


அதுபோல, அரசன் குடிகளை வருத்தாது வரியை நெறி முறையில் தண்டுவானானால் நாடும் பொருளாற் செழிக்கும்; அரசின் கருவூலமும் பொருளால் குவியும். அரசன் வரிகளை முறையாக வசூலிக்க வேண்டும். வரியை வரன்-முறையின்றி விதிக்கக் கூடாது. வரித் தண்டல்காரர்களை தத்தம் விருப்பம் போல செய்ய அனுமதித்தல் கூடாது.

அரசனின் அறிவு, வலிமையுடையதாக இருக்க வேண்டும். அரசன் தக்க சான்றோர்கள் சொல்வதையே கேட்கவேண்டும். அரசன் விரும்புவதனையே “ஆமாம்!” என்று ஆமோதித்து, அறமும் ஆக்கமும் எடுத்துக் கூறத் தவறுபவர்கள் அரசுக்குப் பகைவர்களிலும் கொடியர்.

மக்கள் நெஞ்சு நிறைந்த அன்போடு கொடுக்கும் வரியே, அரசை வாழ்விக்கும் வரி, அங்ஙனமின்றி முறையிகந்து பெறும் வரி அரசையும் கெடுக்கும்; உலகையும் கெடுக்கும் என்று அரசை ஆற்றுப்படுத்தும்பாட்டு இன்றைக்கும் வரி விதிப்பில், வரி வசூலிப்பதில் உள்ள இடர்ப்பாடுகளை நினைவூட்டுகிறது.

காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்
நூறுசெறு வாயினுந் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்