பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.

(புறம்-187)

என்று கூறி விளக்குகிறார். இன்றும் இப்பாடல் நம்நாட்டு மக்களுக்குத் தக்க அறைகூவலாக விளங்குகிறது. கடல் கொந்தளிப்பினால் பாழ், வெள்ளத்தினால் பாழ்; வறட்சி யினால் பாழ் என்றெல்லாம் அவலப்படுகிறோம். ஏன்? நம்முடைய நாட்டை உயிரினும் மேலாக மதித்து, அதனை நாடோறும் வளங்குன்றா நிலையில் பேணிப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டால் இந்நாட்டினும் வளங்கொழிக்கும் நாடு வேறு எது?

ஆதலால் ஒரு நாட்டின் வளத்திற்கும் சிறப்பிற்கும் அந்நாட்டின் ஆடவரே பொறுப்பு என்பது சங்கத் தமிழர் வாழ்வியலின் முடிவு.

சமுதாயம் என்பது பலவுறுப்புக்களை உடையது; தகுதியின் பாற்பட்ட பல பிரிவுகளையுடையது. ஒவ்வோர் உறுப்பும் பிறிதோர் உறுப்புடன் ஒத்திசைந்து, ஒழுங்குற அமைந்து இயங்கும் பொழுதுதான் வாழ்க்கை சிறப்புடையதாக அமைகின்றது; இன்பம் பொதுள இனிது இயங்குகிறது. இங்ஙனம் சமுதாய அமைப்பு இயங்கும் பொழுது என்றும் இளையராக வாழும் இனிய பேறும் கிடைக்கிறது.

ஒன்றோடொன்று உடன்பாடில்லாத சமுதாய வாழ்க்கை முறை கவலையைத் தருகிறது; துன்பத்தைத் தருகிறது; இளமையில் முதுமையைத் தருகிறது; வாழ்க்கை சுவையற்றுப் போய்விடுகிறது என்று சங்கத் தமிழர் எண்ணினர். சங்கத் தமிழர் வாழ்வியல் சமுதாயத்தின் அனைத்து உறுப்புக்களுக்கும் இணைந்து இன்பம் மேவியதாக இருந்தது என்பது அறியற்பாலது.