பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தலைவியிடமிருக்கும் காதலைவிட, பொருளின் மீதுள்ள காதல் பெரிது என்று, அகநானூற்றுத் தலைவி, தன் தோழிக்கு,

“இல்லோர்க்கு இல்லென்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்”

(அகம்-53; 13-15)

என்று கூறுவதால் அறியலாம்.

ஆதலால், சங்ககாலத் தமிழர் வாழ்வியலில் பொருள் ஈட்டுதல் சமுதாய நோக்குடையது. சங்ககாலத் தமிழர் உயர்ந்த பொருளையீட்டி, மற்றவர்களுக்கு வழங்கி வாழ்வளிப்பர். எஞ்சியதிலேயே தம் வாழ்க்கையை இயற்றுவர்.

உயிரினத்தில் எருது உழைப்பிற்குப் பெயர்போனது. அதுபோலவே உழைப்பின் பயனாகிய செந்நெல்லையும், செங்கரும்பையும் மானிடசாதி அனுபவிக்கத் தந்துவிட்டு வைக்கோலையே தின்று உயிர் வாழ்வது. அதனாலன்றோ நமது சமய நெறியில் எருது போற்றுதற்குரியதாக ஏற்றம் பெற்றது.

சங்க காலத்து வழிபடும் தெய்வமாகிய சிவம் ஓங்கி உயர்த்த கொடி, ஏறும் ஊர்தி எருது சிவனின் திருக்கோயில் முன்றிலில் வருவோர்க்கு “உழைப்பிற்கு, முன்நில், உழைப்பின் பயனைத் துய்ப்பதில் கடைசியாக நில்! கொடையிலும் ஆர்ப்பரிக்காதே! அடக்கத்துடன் இரு! இதுவே இறைநெறி! சமயநெறி!” என்று பாடம் கற்பிக்கும் நிலையில் படுத்தும் கிடக்கிறது.

இத்தகு வாழ்க்கை சங்க காலத் தமிழர் வாழ்வில் நிறைந்திருந்ததால்தான் கொலை, களவு முதலிய குற்றங்கள் குறைந்திருந்தன. சமுதாய வாழ்க்கையில் நம்பிக்கையும் நல்லெண்ணமும் மலிந்திருந்தன. இவ்வுயரிய கருத்தினை