பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பலன்கள் ஆகியவைகளைக் கொண்ட மலிவான சரக்குகளையுடைய இதழ்களே மிகுதி மக்களை மேலும், மேலும் அறியாமையில் ஆழ்த்துவதற்கே இந்த இதழ்கள் முயற்சி செய்கின்றன.

ஆதலால், தமிழில் புதிய கலைகளைக் காணும் ஆர்வமில்லை. வளர்ச்சியில்லை. படித்தவர்களானாலும் சரி, படிக்காதவர்களானாலும் சரி அறிவியற் செய்திகளைப் படிப்பதில் கேட்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நாட்டில் எப்படி மொழி வளரும்? சிந்தித்து விவாதிக்கப் பெறும் பட்டிமன்றங்களை எதிர்க்கிறார்கள்; தரங்குறைந்து போவதாகச் சொல்லுகிறார்கள். ஆனால், சிந்தனைக்குப் பயனில்லாத, சிந்தனையைத் துரண்டாத, மலிவான தரம் குறைந்த நகைச்சுவைகள் நிறைந்த கதாகாலட்சேபங்களை யாரும் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? சிந்திக்கும் அறிவு வளர்ச்சியை எப்படியோ முடக்கப் பார்க்கிறார்கள். எடுத்ததற்கெல்லாம் சமயத் துறையில் பிற்போக்கானவர்கள், "விஞ்ஞானம் வளர்த்ததன் பயன் என்ன? அணுகுண்டு கண்டதுதான்? அழிவுதான்!” என்று வளர்ந்துவரும் அறிவியலைக் கிண்டலும் கேலியும் செய்கின்றனர். இறைவனை நோக்கித் தவம் செய்தவர்கள் கூட அழிவாற்றலை வரமாகப் பெற்று அமரர்களுக்கும், மானுட சாதிக்கும் தீராத தொல்லைகள் தந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அப்படியானால் தவம் செய்யும் முயற்சியும் கெட்டதுதான், என்று ஒத்துக் கொள்வார்களா? இந்த மாதிரியான பிற்போக்கு எண்ணங்களின் காரணமாகத் தமிழ் மக்களிடத்தில் அறிவு வளரவில்லை. எந்த ஒன்றையும் அறிவியல் பார்வையில் அணுகும் அறிவும் வளரவில்லை. புறத்தே வளர்ந்துவரும் விஞ்ஞான சாதனங்கள் தமிழ் நாட்டைக் கவ்விப் பற்றிக் கொண்டிருந்தாலும் தமிழ் மக்களின் வாழ்க்கைப் போக்கில் அறிவியல் பாங்கில்லை. ஏன்? சிலர் அறிவியல் தமிழில் வராது என்றும் அறிவியலுக்கு