பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

117


 யாரும் மறுக்க முடியாது. அஸ்ஸாமில் மண்ணின் மைந்தர் கொள்கை, பாஞ்சாலத்தில் காலிஸ்தான்-கொள்கை, தமிழகத்தில் திராவிட நாடு எண்ணம் இவைகள் இமயம் முதல் குமரி வரையில் ஒரு நாடு என்னும் உணர்விற்கு மாறானவை. இது மட்டுமா? அரசியல் கட்சிகளுக்கிடையிலும் சமயநெறியாளர்களுக்கிடையிலும் வளர்ந்து வரும் சண்டைகளால் ஒரு நாட்டில் ஒருவருக்கொருவர் நட்பாக உறவு கொண்டு உடன்பிறப்பாளர்களாக வாழ்வதற்குப் பதில் பகைவர்களாக வாழும் பண்பின்மையைப் பார்க்கிறோம். இன்று இந்திய மக்களின் பெரும்பான்மையான ஆற்றல் வெறுப்பிலும் பகையிலும் செலவழிக்கப் பெறுகிறது. இவை மட்டுமா? சாலை ஒரத்தில் உள்ள குளிர்தரு மரங்களை-நிழல்தரு மரங்களை நாட்டுடைமையாகக் கருதிப் பாதுகாக்கும் உணர்வில்லையே! கருத்து வேற்றுமைகள் அல்லது கட்சிச் சண்டைகள் ஏற்படும்பொழுது நாட்டுடைமைகளாகிய பேருந்துகளையும் பொதுச் சொத்துக்களையும் எளிதாக அழிக்கும் உணர்வினைப் பார்க்கிறோம். ஏன்? நாட்டிற்கு, நாட்டின் நலனுக்கு நாடு நமது வாழ்வுக்குச் செய்யும் பணிகளுக்கு நாம் செலுத்தக்கூடிய வரிகளை ஒழுங்காகச் செலுத்தும் மனப் போக்கில்லையே. இந்தச் சீரழிவுகளுக்கு எல்லாம் காரணம் நாம் இந்த நாட்டின் மக்கள் என்னும் உணர்வைப் பெறாமைதான் என்றால் மிகையாகாது.

பாரதியின் நூற்றாண்டு விழாக் கொண்டாடும்போது இதைப் பற்றி நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். பாரதியின் நூற்றாண்டு விழாவின் நினைவாக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை மேலும் வலிமைப்படுத்தவேண்டும். ஒருமைப்பாட்டிற்கு விரோதமாக நிலவும் எந்த வேற்றுமைகளையும் கடுமையாகக் கணித்து ஒதுக்க வேண்டும். நாட்டில் சாதி, இன அமைப்புக்களின் பெயரால் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கட்சிகளை, நிறுவனங்களை, இயக்கங்-