பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சுத்தாமில்லாப் பஞ்சமர் கோயிற்
சுவாமியைப் பூசிப்பரே-எனில்
நித்தமுயர்ந்தவர் நீரில் குளிப்பது
யாதுக்கு யோசிப்பீரே!

(பாரதிதாசன் கவிதைகள்-மூன்றாம் தொகுதி)

என்பது பாவேந்தனின் வினா! அதோடு கவிஞன் விடவில்லை. திருக்கோயிற் கருவறைக்குள் பூனை, பெருச்சாளி, வெளவால் ஆகியன எல்லாம் சுற்றுகின்றன. ஆயினும் மானிடன் மட்டும் ஏன் அனுமதிக்கப் படுவதில்லை.

"நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி
நேரில் அக்கோயிலிலே-கண்டும்
ஒத்தபிறப் பினரை மறுத்தீர் உங்கள்
கோயிலின் வாயிலிலே”

(பாரதிதாசன் கவிதைகள் 3-ஆம் தொகுதி. பக்கம் 20)

என்று பாடுகின்றான் பாவேந்தன்.

ஏன்? ஏன்? திருக்கோயில் கருவறை நுழைவுப் போராட்டம், தமிழ் வழிபாடு ஆகிய இயக்கங்கள் நடந்த பொழுது முன்னாள் முதல்வர் பக்தவத்சலனார் அவர்கள், மரபுரிமை கருதிக் கடுமையாக எதிர்த்தார்., அவர், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்தவர். அவரைக் கேட்பது போலப் பாவேந்தன் கேட்கிறான்.

"முப்பது கோடியர் பாரதத்தார்-இவர்
முற்றும் ஒரே சமூகம் என
ஒப்பும் தலைவர்கள் கோயிலில் மட்டும்
ஒப்பா விடில் என்ன சுகம்"

(பாரதிதாசன் கவிதைகள் 3-ஆம் தொகுதி, பக்கம் 200)

என்பது பாவேந்தனின் வினா.