பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நடத்துவது அரிது! அரிது! ஆதலால், அன்றாட வாழ்வுக்கே அல்லற்படுகின்ற நிலையை ஏழ்மை என்றும், வாழ்க்கையில் வசதிகளைத் தேடிக் கொள்ள முடியாத நிலையை வறுமை என்றும் நாம் பிரித்துப் பார்ப்பதில் தவறில்லை என்றே கருதுகின்றோம். வறுமை வேறு! ஏழ்மை வேறு. ஏழ்மையென்பது அன்றாட வாழ்வில் தேவைக்காகவே போராடுவது; அல்லற்படுவது. வறுமை என்பது இந்த உலகில் காணப்பெறும்-படைக்கப்பெறும் நுகர்பொருள்களையெல்லாம் அடைந்து அனுபவிக்க இயலாமை. அடிப்படை வாழ்விற்கு உத்தரவாதம் தேவை. இதுவே நமது கருத்து. பாவேந்தன் கருத்து நம்முடன் முற்றிலும் முரண்பட்டதன்று.

இந்த நிலைமையை விவரித்துப் பலர் எழுதி எழுதியே கை ஒய்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு விட்டார்கள். மாமேதை கார்ல்மார்க்சு மட்டுமே இப்படித்தான் உலகம் இருக்க வேண்டும் என்று துணிவுடன் கூறினார்; எழுதினார்; இயக்கம் நடத்தினார்; போராடினார்; வெற்றி பெற்றார். மார்க்சு திறமைசாலி மட்டுமல்ல. திறமைசாலிகள் பலர் கிடைக்கக்கூடும். ஆனால் மேதைகள் எளிதில் கிடைக்க மாட்டார்கள். மார்க்சு மாமேதை. அதனால்தான் மார்க்சு இறந்தபொழுது "மார்க்சு சிந்திப்பதை நிறுத்திக் கொண்டு விட்டார்” என்று கூறினார் ஏங்கெல்ஸ்.

பொருளாதார வேற்றுமை தோன்றிய பிறகு, தானங்களால், தருமங்களால், இலவசங்களால் ஏழ்மைக்குத் தீர்வு காண நமது முன்னோர்கள் முயன்றார்கள். கைகூடிய பலன் யாதொன்றும் இல்லை. இருள் சூழ்ந்தது. இந்தச் சூழ்நிலையில் ஒரு விடிவெள்ளி தோன்றியது. அவர்தான் மாபெரும் சிந்தனையாளராக விளங்கிய கார்ல்மார்க்சு. மனிதகுல வரலாற்றைக் கூர்ந்து நோக்கி உழைப்பு, கூலி, உபரி, லாபம் என்ற தத்துவத்தைக் கண்டுபிடித்தார். மாமேதை மார்க்ஸ், உழைப்பாளிகளின் செல்வம் சுரண்டப்படாதிருக்க வேண்டுமென்றால் உற்பத்திக் களங்களும் உற்பத்திக்