பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

343


உள்ளது. அதாவது ஆங்கிலத்தின் வாயிலாகக் கற்றால்தான் நடுவணரசின் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும் என்பது உண்மையன்று! நடுவணரசு, "இந்திய நாட்டு மொழிகள் 14-ல் எந்த மொழியிலும் நடுவணரசுப் பணித் தேர்வுகளை எழுதலாம்” என்று அறிவித்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது! ஆதலால் ஆங்கில மொழியே தமிழ்நாட்டின் இணையாட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது பொருந்தாது. அது மட்டுமல்ல. ஆங்கிலம் கற்பது வேறு. ஆங்கிலத்தின் வாயிலாகக் கற்பது வேறு, நாம் ஆங்கிலம் கற்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆங்கிலத்தைக் கற்போம். மிகமிக நன்றாகவே கற்போம்! அறிவியல், தொழிலியல் துறைப்பாடங்களைத் தமிழ் வாயிலாகக் கற்க வேண்டும் என்பதே பாவேந்தன் எண்ணம். ஆனால், இன்று எங்கும் ஆங்கிலப் பற்று! பச்சிளம் மழலைகள் ஆங்கிலம் கற்கிறார்கள். தமிழ் பயிலவில்லை! இது வெட்கப்பட வேண்டிய செய்தியல்லவா! பாவேந்தன் குடும்ப விளக்குக் காப்பியத் தலைவி மூலம்.

...எப்படிக்கும்
முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும்”

(குடும்ப விளக்கு-பக்.31)

என்று கூறுகின்றான். ஆம்! தமிழ்நாட்டுக் குழந்தைகள் தமிழ் படிக்க வேண்டும். நாம் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய வேண்டும்.

பெண்ணின் பெருமை

பாவேந்தன் பாரதிதாசன் மகளிர்குல விடுதலைக்குத் தன்னுடைய ஆசிரியன் பாரதியைப் போலவே, இல்லை - பாரதியைவிட வேகமாகப் பாடியவன். பெண்களுக்குக் கல்வி தேவை. தாய்மை நிலையடையும் பெண்களுக்குக் கல்வி அவசியம். பெண்கள் கற்றாலே நல்ல தலைமுறை தோன்றும்.